தேமுதிக தலைவர் விஜய்காந்த்தின் சட்டமன்றத் தொகுதியான விருத்தாசலத்தில் ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க தேமுதிகவும் பாமகவும் கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 கவுன்சிலர் பதவிகளில் அதிமுக, தேமுதிக ஆகியவை தலா 5 இடங்களிலும், பாமக 3 இடங்களிலும், திமுக 1 இடத்திலும் சுயேச்சைகள் 5 இடங்களையும் பிடித்துள்ளனர்.
இதையடுத்து இந்த ஒன்றியத்தின் சேர்மன் பதவியைக் கைப்பற்ற அதிமுக, தேமுதிகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாமகவும் சுயேச்சைகளும் யாரை ஆதரிக்கிறார்களோ அந்தக் கட்சிக்கே தலைவர் பதவி கிடைக்கும்.
இந் நிலையில் அதிமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் பாமக மற்றும் சுயேச்சைகளிடம் பேச்சு நடத்தி ஆரம்பித்துள்ளன.
இதில் பாமகவுக்கு துணை சேர்மன் பதவியை விட்டுத் தர இரு கட்சிகளுமே முன் வந்துள்ளன.
அதிமுக-பாமக இடையே மாநில அளவில் பலமுறை கூட்டணி இருந்துள்ளது. ஆனால், விஜய்காந்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பாமகவுடன் தேமுதிக கூட்டணிக்கு முயல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் சுயேச்சைகளை மொத்தமாக வளைத்து பதவியைப் பிடிக்க அதிமுகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இங்கு தேமுதிக-பாமக கூட்டணி உருவானால் பிற்காலத்தில் அது மாநில அளவிலான கூட்டணிக்குக் கூட அடிப்படையாக அமையலாம்.
No comments:
Post a Comment