தேர்தலில் மாறுபட்ட தீர்ப்பை வழங்குவதை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். அலை அல்ல சுனாமியே அடித்தாலும் குமரி மாவட்டத்தில் மட்டும் ராஜாங்கம் பண்ண முடியாமல் திராவிட கட்சிகள் தவிக்கிறது. 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அன்று முதல் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சி வேட்பாளர்களை இம்மாவட்டம் கை தூக்கி விட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பின்னர் 1977-ல் நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக இங்கு திராவிட கட்சிகள் கால் ஊன்றியது. அந்த ஆண்டு முதல் மொத்தம் ஏழு தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே திராவிட கட்சிகளுக்கு கிடைத்து வருகிறது. காங்கிரஸ், மா.கம்யூ., போன்ற கட்சிகளுக்கு இம்மாவட்டம் தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்கி வருகிறது. அது போல தமிழ்நாட்டில் ஏன் தென் மாநிலங்களிலேயே முதன்முறையாக பா.ஜ.எம்.எல்.ஏ.ஐ தேர்வு செய்ததும் குமரி மாவட்டம்தான்.
அலை அல்ல சுனாமியே அடித்தாலும் அது இம்மாவட்டத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. பல தேர்தல்கள் இதை உறுதி செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. அலை அடித்தது. ஆனால் இங்கு அந்த கூட்டணி ஆறுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நான்கில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதை அடுத்து தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுனாமியே அடித்தது. ஆனால் இங்கு அப்படி ஒரு சூழலே ஏற்படவில்லை. ஆளும் கட்சி என்ற பலத்துடன் இறங்கிய அ.தி.மு.க நான்கில் ஒரு நகராட்சியை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த நகராட்சியில் கவுன்சிலர்களின் மெஜாரிட்டி அக்கட்சிக்கு இல்லை.
டவுன் பஞ்சாயத்திலும் அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. முதல் இடத்தில் பா.ஜ., வும், இரண்டாம் இடத்தில் தி.மு.க.வும் உள்ளது.மாவட்ட பஞ்சாயத்தில் நான்கு இடங்கள் பெற்று தனி பெரும் கட்சியாக அ.தி.மு.க. வந்தாலும் தலைவர் பதவியை பிடிக்க மேலும் இரண்டு கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை குமரி மாவட்டத்தில் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. நாகர்கோவில் நகராட்சியில் பா.ஜ., வெற்றி பெற்று மீனாதேவ் தலைவர் ஆகியுள்ளார். ஆனால் இதே பா.ஜ.,வின் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை கடந்த தேர்தலில் நாகர்கோவில் மக்கள் தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளி விட்டனர். இப்படி எல்லா கட்சிக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதன் மூலமும், பலரை அதிர்ச்சி தோல்வி அடைய செய்வதன் மூலமும் குமரி மாவட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட கட்சிகள் ராஜாங்கம் பண்ணினாலும் இங்கு மட்டும் அது நடக்காமல் போவது இரண்டு கழகங்களுக்கும் சற்று ஏமாற்றமான விஷயம்தான்.
No comments:
Post a Comment