தி.மு.க.வின் எழும்பூர் பகுதி 103-வது வட்ட செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி புகார் கூறியதன் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 2 நாளிலேயே அவர்கள் 3 பேரும் பரிதி இளம்வழுதிக்கு தெரியாமலேயே மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இதனால் தனது துணைப்பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பரிதி இளம்வழுதி கட்சி தலைவருக்கு கடிதம் எழுதினார். நேற்று முன்தினம் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை பரிதி இளம்வழுதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி தலைமைக்கு நான் தான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதனை ஏற்றுக் கொண்டு புதிய நிர்வாகிகளாக வி.பி.துரைசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நான் தி.மு.க.வில் இன்னும் வடசென்னை மாவட்டத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் பணி தொடர்ந்து இருக்கும். கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன்.
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள், கட்சி வேட்பாளர்களின் தோல்விக்கு பாடுபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறினேன். அவரும் உண்மையை புரிந்து கொண்டு நீக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்கும் போது என்னிடம் எந்த தகவலும் கூறவில்லை. அவர்களை சேர்க்கும்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. நான் இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கூறலாம் என்று 4 முறை முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்.
நான் ராஜினாமா கடிதம் கொடுத்த போதும் என்னை அழைத்து விசாரணை செய்வார்கள் என்று நினைத்தேன். என்னையும் விசாரிக்கவில்லை. இங்கு இருக்கும் நிலை தான் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது என்கிற வருத்தத்தில் தான் ராஜினாமா செய்தேன். இதுபோன்ற மனக்குமுறலோடு இருப்பவர்களுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன். இப்போதும் எனக்கு தலைவர் கருணாநிதி தான். கட்சியில் ஜனநாயக ரீதியாக யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
இப்போதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளாக இருவர் நியமிக்கப்பட்டிருப்பதையும் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அவரையும் மீறி நடந்திருக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். அவரது முழுகட்டுப்பாட்டில் கட்சி இல்லை. எனக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்க அழைத்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் என் மீதான வழக்குகளுக்கு பயந்து தான் இப்படி செயல்படுவதாக கூறுவது சிரிப்பாக இருக்கிறது. என்னைப் பற்றி அனைவருக்குமே தெரியும். நான் பல அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
வழக்குகளுக்கெல்லாம் நான் பயப்படுவதில்லை. கட்சி தலைவர் கருணாநிதியையோ, பொருளாளர் ஸ்டாலினையோ வாய்ப்பு வரும்போது சந்திப்பேன்.
இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேரும் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment