கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள், பேட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. இதையடுத்து இதைப் பதுக்கி வைத்தவருக்கும், பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, கடந்த 28ம் தேதி ராஜபாளையம் வழியாக நெல்லை செல்லவிருந்த நிலையில், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி என்ற இடத்தில் தரைப்பாலத்தின் கீழ் 9 அடி நீளமுள்ள பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தற்போது உள்ளூர் போலீஸார், கியூ பிரிவு போலீஸார், உளவுப்பிரிவினர் உள்ளிட்ட போலீஸ் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பைப் வெடிகுண்டை வைத்தவர்கள் குறித்த சில தடயங்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன.
வைத்தது 2 பேர்?
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் மிகவும் பிசியான சாலையாகும். எப்போதும் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கும். நள்ளிரவில் இங்கு குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அன்றைய இரவு டூவீலர் ஒன்றில் 2 பேர் பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்ததாக சிலர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள்தான் குண்டை வைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் பைப் வெடிகுண்டில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியில் வரிசை எண், உள்ளிட்டவற்றை தெளிவாக அழித்துள்ளனர். எனவே இது நன்கு திட்டமிட்ட சதிச் செயலாக கருதப்படுகிறது. 2 பேர் மட்டுமல்லாமல் மேலும் சிலரும் இதில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
திருவட்டாரில் ஜெலட்டின் சிக்கியது
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஒருவரது வீட்டிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவட்ட்டார், கொல்லங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கென்னடி. இவரது மனைவி பிஜூ. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதற்காக மனைவியின் வசதிக்காக கொல்லங்கோட்டில் வீடுவாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் கென்னடி. இவரது சொந்த ஊர் குலசேகரம் ஆகும்.
இந்த நிலையில், நேற்று இரவு போலீஸாருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், கென்னடி வீட்டைக் குறிப்பிட்டு அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார்.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். கென்னடி வீட்டில் அவர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அதை பார்த்தபோது அதில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரிய வந்து போலீஸார் அதிர்ந்தனர்.
இதையடுத்து அந்தப் பெட்டியை முழமையாக பரிசோதித்தபோது ஜெலட்டின் குச்சிகளை இணைக்கும் வயர்கள், பேட்டரிகள் இருந்த அட்டைகள் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கென்னடியை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருக்கும், அத்வானி பாதையில் குண்டு வைத்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment