ஷாரூக் கானின் ரா ஒன் திரைப்படம் முதல் நாளில் ரூ 18.25 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது சல்மான் கானின் பாடி கார்ட் படம் வசூலித்த ரூ 21 கோடியை விட குறைவுதான்.
இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரா ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், முதல் நாளில் ரூ 18.25 கோடியை மட்டுமே அந்ப் படம் ஈட்டியது தெரியவந்துள்ளது.
ஆனால், இரண்டாம் நாளில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.25 கோடியை குவித்துள்ளது ரா ஒன். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை என்று இதனை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் ரூ.140 கோடியில் தயாரான சயின்ஸ் பிக்ஷன் படம் ரா ஒன். ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.
ரஜினிகாந்த் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து கைத்தட்டல்களை அள்ளினார்.
இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இந்தியால் ரூ.15 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.3.25 கோடியாகவும் இருந்தது. முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்து, பாடிகார்ட் படத்தின் ரூ.21 கோடி சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நடக்காமல் போனது.
ஆனால் இரண்டாவது நாள் இந்தப் படம் வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.25 கோடியை வசூலித்து ஷாரூக் கானுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.
'ரா ஒன்னை தீபாவளி அன்றே வெளியிட்டது தவறாகப் போய்விட்டது. காரணம், மக்கள் அனைவரும் தீபாவளியன்று திரையரங்கில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த நல்ல நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அதனால்தான் வசூல் குறைந்தது. இல்லாவிட்டால் முதல் நாளில் ரூ.25 கோடியை எட்டியிருக்கும்,' என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான கோமல் நஹாதா.
எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பெரிய ஓபனிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது ரா ஒன்னுக்கு. முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படம். காரணம்... சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஒன் அன்ட் ஒன்லி ரஜினி தான்!
பல நகரங்களில் ரஜினி ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட் வைத்து, முதல் நாள் முதல் காட்சியை மேள தாளத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
ஷாரூக்கானின் பிஸினஸ் உத்திக்கு கிடைத்த அபார வெற்றி இது!
No comments:
Post a Comment