இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய “தொடரும் நீதிக்கொலைகள்” என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்.
சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக கிடைக்கிறதோ அது தான் அதிகமாக படத்தில் வரும். சில்க்கின் கவர்ச்சி நடனத்துக்கு கைதட்டல் கிடைத்தால், அந்த கவர்ச்சி நடனத்தை எல்லா படத்திலும் வைப்போம். கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு கைதட்டல் அதிகமாக கிடைத்தால்,
அதை எல்லா படத்திலும் வைப்போம். எதற்கு தியேட்டடில் மக்கள் கை தட்டுகிறார்களோ அதை நோக்கி சினிமாவின் பார்வை திரும்பும். இன்று ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது.
இப்போது ‘வெடி’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. விஷால் அதில் நடித்திருக்கிறார். அது சராசரியான மசாலா படம் தான். அந்த படம் பற்றி உங்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அதில் ஹீரோ விஷால், என் பெயர் பிரபாகரன், எனக்கு பயம்ன்னா என்னனு தெரியாது என்ற வசனத்தை பேசும் போது, தியேட்டர் இடிந்து போகிற மாதிரி கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.
அதேபோல சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படத்தில் ஈழம் விடுதலை சம்பந்தமான பல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதான் தமிழர்களின் உணர்வு.
எல்லாரும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை இல்லை. அதற்கு அவர்களுடைய சூழல், குடும்ப சூழல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாரும் போராட வீதிக்கு வரவில்லை என்பதற்காக தமிழர்களுக்கு உணர்வு இல்லை என்று அர்த்தமாகிவிடாது.
எனவே ஈழ விடுதலைக்கு மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது, எனவே ஈழ விடுதலை பற்றி மேலும் பல படங்கள் வெளிவரும் என்றார்.
No comments:
Post a Comment