புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் சர்வாதிகாரி மும்மர் கடாபியின் உடலை உணவுகள் வைக்கும் குளிர்சாதன அறையில் தரையில் போட்டு வைத்திருந்த நிலையில் தற்போது அது அழுக ஆரம்பித்து விட்டது. இதையடுத்து உடலை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சொந்த ஊரான ஷிர்டேவில் வைத்து பிடிபட்ட கடாபி மற்றும் அவரது மகன் முட்டாசிம் ஆகியோர் புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டனர். கடாபியை தெருவில் இழுத்து வந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்தனர். அவரது மகன் முட்டாசிமை உயிருடன் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்து பின்னர் கொலை செய்தனர்.
இதையடுத்து கடாபி, முட்டாசிம் மற்றும் கடாபி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் யூனிஸ் ஆகியோரின் உடல்களை மிஸ்ரடா நகருக்குக் கொண்டு வந்து அங்குள்ள ஒரு உணவு மற்றும் இறைச்சியை பாதுகாத்து வைக்கும் இடத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்குள்ள ஒரு குளிர்சாத அறையில் மூவரின் உடல்களையும் தரையில் போட்டு வைத்தனர். பின்னர் மக்கள் வந்து பார்க்க அனுமதித்தனர். இதையடுத்து ஏராளமானோர், பெரும்பாலானவர்கள் புரட்சிப் படையினர் மற்றும் கடாபி எதிர்ப்பாளர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று கடாபியின் உடலைப் பார்த்தனர். அவரது உடலைப் பார்த்து பலரும் திட்டிச் சென்றனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கடாபி உள்ளிட்டோரின் உடல்கள் அழுகத் தொடங்கின. இதையடுத்து மூவரின் உடல்களையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். அதன்படி மூவரின் உடல்களும் மாற்றப்பட்டன. பின்னர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் கடாபி, அவரது மகன் ஆகியோரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டதாக புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உடல் அடக்கம் எங்கு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. ரகசிய இடத்தில் உடல்களைப் புதைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புரட்சிப் படையைச் சேர்ந்த இப்ராகிம் பெய்தமால் என்பவர் கூறுகையில், உடல்கள் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது எனக்குத் தெரியும் என்றார்.
கடந்த நான்கு நாட்களாக லிபிய மக்கள் கடாபியின் உடலைப் பார்த்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment