2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார். இதனால், ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமானாலும் 3ம் தேதி வரை கனிமொழி திகார் சிறையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 14 பேரில் ஆ.ராசா தவிர்த்த 13 பேர் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
விசாரணையின்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆப்தாப் அகமத் கூறுகையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்துவிட்டதால் கனிமொழி ஆதாரங்களைக் கலைப்பார் என்ற அச்சத்துக்கு இடமில்லை. இதனால் அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டியதில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். வேண்டுமானால் ஜாமீனிக்கு கடுமையான நிபந்தனைகளைக் கூட நீதிமன்றம் விதிக்கலாம். அவர் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூட உத்தரவிடலாம் என்றார்.
அதே போல மற்றவர்களின் வழக்கறிஞர்களும் ஜாமீன் கோரி வாதாடினர்.
இந்த வாதங்களுக்கு சிபிஐ பிற்பகலில் தனது பதிலை தாக்கல் செய்தது. அப்போது கனிமொழி, சரத்குமார், ராஜிவ் அகர்வால், ஆசிப் பல்வா, கரீம் மொரானி ஆகிய 5 பேருக்கும் ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.
ஆனால், ஷாகித் பல்வா உள்ளிட்ட மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆனால், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.
முன்னதாக இவர்களது ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வரை போய் நிராகரிக்கப்பட்டு விட்டது நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு திமுக தலைவர் கருணாநிதி இன்றும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருந்தார். மேலும், திமுக முக்கியத் தலைவர்களும் டெல்லியில் குவிந்தனர். ஜாமீன் மனு மீது விசாரணை நடந்த நீதிமன்றத்துக்கு கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோரும் வந்திருந்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தது சிபிஐ. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து ராசா தவிர்த்த மற்ற அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், 5 பேரின் ஜாமீனை சிபிஐ எதிர்க்கவில்லை.
சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து கனிமொழிக்கு இன்று ஜாமீன் வழங்கப்படும் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். எனினும் தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தீபாவளியை திகார் சிறையிலேயே கனிமொழி கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது கிரிமினல் சதித் திட்டம், மோசடி மற்றும் ஏமாற்றுதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமானது நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுதான். இந்தக் குற்றச்சாட்டு ராசா மற்றும் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா மீது நேரடியாக சாட்டப்பட்டுள்ளது. மற்ற 12 பேர் மீது, அரசு ஊழியர்களை நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்குத் தூண்டி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டதால் மேற்கண்ட இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இருப்பினும் ராசா மட்டும் இதுவரை ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment