கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டெய்ன்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் ப்யூட்லர் மற்றும் பிரான்சைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன் ஆகிய 3 பேரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் வருத்தம் என்னவென்றால் ரால்ப் கடந்த வெள்ளிக்கிழமை தான் புற்றுநோயால் காலமானார்.
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ரால்ப் ஸ்டெய்ன்மேன் (68). அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் ப்யூட்லர்(53) மற்றும் பிரான்சைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன் (70) ஆகியோருடன் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வெல்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக கணையப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரால்ப் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுயநினைவின்றி இருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிர் இழந்தார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் இறந்துவிட்டதால் அந்த பரிசு அவரது வாரிசுகளுக்கு அளிக்கப்படும்.
மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ரகசியத்தை இந்த 3 விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் புற்று நோயை குணப்படுத்தலாம், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கலாம், நோய்த் தொற்றுகள், வீக்கம் போன்றவற்றுக்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய சிறந்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியும்.
1.5 மில்லியன் டாலர் பரிசு அந்த 3 பேருக்கும் பிரி்த்துக் கொடுக்கப்படும்.
புற்றுநோயை குணப்படுத்த வழிவகை கண்ட ரால்ப் கணையப் புற்றுநோய்க்கே பலியாகியிருந்தாலும், அவரது கண்டுபிடிப்பை வைத்துத்தான் இத்தனை காலம் அவர் தனது வாழ்நாளை நீட்டித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு அறிவிக்கும் வரை நோபல் பரிசுக் குழுவுக்கே ரால்ப் இறந்தது தெரியாது. இது குறித்து தகவல் அறிந்ததும் நோபல் பரிசுக் குழு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது. ரால்ப் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் வந்து பரிசைப் பெறுவார் என்று நினைத்தோம். ஆனால் நடக்காத விஷயம் ஆகிவிட்டது என்று அந்த குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment