தமிழகத்தில் மொத்தமுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 9,864 பதவிகளை அதிமுகவும், 4,059 திமுகவும் பிடித்துள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன.
இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
இதில் அதிமுக 9,864 பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில், 580 வார்டுகளை (கவுன்சிலர் பதவிகள்) கைப்பற்றியுள்ளது.
124 நகராட்சிகளில் 89 நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. 1,680 நகராட்சி வார்டுகளையும், 285 பேரூராட்சிகளையும், 2,849 பேரூராட்சி வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 574 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3,797 பதவிகளையும் அதிமுக பிடித்துள்ளது.
திமுக வசம் போன பதவிகள்:
திமுகவுக்கு 4,059 உள்ளாட்சி பதவிகள் கிடைத்துள்ளது. 23 நகராட்சிகளையும் 121 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
10 மாநகராட்சி வார்டுகளில் 129 கவுன்சிலர் பதவிகளையும், நகராட்சி வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1,820 பதவிகளையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 27 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 976 பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை சுயேச்சைகள் தான் பிடித்துள்ளனர். மொத்தம் 3,322 பதவிகள் சுயேச்சைகள் வசம் போயுள்ளன. இதில் 5 நகராட்சிகள், 64 பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் 56 கவுன்சிலர் பதவிகளும் அடக்கம்.
4வது இடத்தில் தேமுதிக:
தேமுதிக 857 பதவிகளை மட்டுமே பிடித்து சுயேச்சைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் மொத்தமே 8 கவுன்சிலர் பதவிகள் என தேமுதிக படு கேவலமான நிலையை அடைந்துள்ளது.
தேமுதிகவைவிட மட்டம் அகில இந்திய கட்சியான காங்கிரஸ். மாபெரும் அதிமேதாவிகளான இளங்கோவன், யுவராஜா போன்ற தலைவர்களைக் கொண்ட இந்தக் கட்சிக்கு மொத்தம் கிடைத்த பதவிகள் 740 மட்டும்.
இதில், 24 பேரூராட்சிகள் அடங்கும். ஆனால், அந்தக் கட்சிக்கு ஒரு நகராட்சி கூட கிடைக்கவில்லை.
பாமகவுக்கு 400 பதவிகளும், யாருமே எதிர்பாராத வகையில் பாஜகவுக்கு 2 நகராட்சிகள் உள்பட 270 பதவிகளும், மதிமுகவுக்கு 1 நகராட்சியும் 193 பதவிகளும் கிடைத்துள்ளன.
தேமுதிகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 நகராட்சிகளும் 159 பதவிகளும் கிடைத்துள்ளன.
ஆனால், அதிமுக கூட்டணிக்காக அலையாய் அலைந்து தோற்ற தா.பாண்டியனை மாநிலச் செயலாளராகக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 99 பதவிகளே கிடைத்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 47 பதவிகளைப் பிடித்துள்ளன.
தனித்தனியாகப் போட்டியிட்டதால் கட்சிகளின் உண்மையான பலம் வெளியில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment