சங்கரன்கோவிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்ய கால தாமதம் ஆனதால் பிரசாரத்திற்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி மைக் செட்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வேறு ஒரு மைக்கில் பேசும்போது நான் பிரவீன் குமாரிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் விஜயகாந்த் குறிப்பிட்டது மத்திய தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரவீன்குமாருக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரண்கோவிலில் நேற்று இரவு பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.அவர் பிரசாரம் செய்வதற்கான நேரத்தைக் குறிப்பிட்டு போலீஸாரிடம் அனுமதி வாங்கியிருந்தனர் தேமுதிகவினர். ஆனால் வழியில் தாமதமாகி விட்டதால் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டித்தான் விஜயகாந்த்தால் வர முடிந்தது.
இதையடுத்து போலீஸார் திடீரென மைக் செட்டுகள், ஆம்ப்ளிபயர் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கோபமடைந்து டிஎஸ்.பி. மதிவாணனை முற்றுகையிட்டனர். இருப்பினும் பலன் ஏதும் இல்லை.
இதையடுத்து விஜயகாந்த்துக்குத் தகவல் கொடுத்தனர். அவரும் வந்து சேர்ந்தார். பிறகு அவரிடம் வேறு ஒரு மைக் கொடுக்கப்பட்டது. அந்த மைக்கைப் பிடித்த விஜயகாந்த் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா? நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர். எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க தரணும்.
இது உங்களுக்கு தெரியாதா? இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க. குறிப்பிட்ட நேரம் தவறி வந்தாலும், தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும் என்கிற அவசியம் இல்ல.
நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா? மக்களைக்காக்க வேண்டியதுதான் போலீசின் வேலை. அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச் சொல்லி யாரேனும் சொன்னாங்களா?
முன்னால நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம். இப்ப 27 எம்.எல்.ஏவாக இருக்குறோம். நாளைக்கு நாங்கதான். இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.
உங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல. தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்கிட்ட நான் பேசிக்குறேன். உங்க நண்பன்னு காவல்நிலையத்தில் போர்டு போட்டிருக்கீங்களே. முதல்ல அத தூக்கி தூர வீசுங்க என்று படு கோபமாக பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்தான். அதன் ஆணையராக இருப்பவர் சோ. அய்யர். இவர் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர். பிரவீன்குமார், மத்திய தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆவார். சோ. அய்யரிடம் பேசுகிறேன் என்று சொல்வதற்குப் பதில் பிரவீன்குமாரிடம் பேசிக் கொள்கிறேன் என்று நேற்று விஜயகாந்த் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment