லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிபர் கடாபிக்கு எதிரான புரட்சிப்படை லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றியதும் அவர் ரகசியமாக தன் சொந்த ஊரான சிர்ட்டேக்கு ஓடி வந்து விட்டார். அங்கு அவர் பதுங்கி இருந்தார். அவரது ஆதரவு ராணுவம் அந்த ஊரில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடாபி தன் ஆதரவு ராணுவ வீரர்கள் சூழ சிர்ட்டே நகரை விட்டு வெளியேறினார். அவருடன் ராணுவ தளபதி அபு பக்கீர் யூனிஸ் ஜபீர் உடன் இருந்தார். அவர்கள் மேற்கு திசை நோக்கி புறப்பட்டனர்.
கடாபியும் வீரர்களும் வாகனங்களில் பயணம் செய்தபோது பிரான்சு நாட்டு போர் விமானங்கள் கடாபி ஆதரவு படையின் வாகனங்கள் மீது குண்டு வீசி தாக்கின. இதில் கடாபி காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.
சிர்ட்டேக்கு மேற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் 15 ராணுவ வாகனங்கள் கருகி கிடந்தன. இந்த வாகனங்கள் விமானத்தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய கடாபியும், சில ராணுவ வீரர்களும் தெருக்களில் ஓடினார்கள்.
கடாபி பிரதான சாலைக்கு வந்ததும் சில வீரர்களுடன் அங்கு இருந்த சாக்கடை குழாய்க்குள் இறங்கி பதுங்கிக் கொண்டனர். அப்போது சாலையில் நின்று இருந்த புரட்சிப்படை வீரர்கள் அவர்களை பார்த்து விட்டனர். இந்த வீரர்களில் ஒருவரான பக்கீர் அப்போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியதாவது:
கடாபியும் அவரது பாதுகாவலர்களும் சாக்கடை குழாயில் பதுங்கி இருந்ததைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டோம். இதில் யாரும் காயம் அடையவில்லை.
இதனால் நாங்கள் அவர்களை நோக்கி நடக்க தொடங்கினோம். அப்போது எங்களை நோக்கி கடாபி ஆதரவாளர் ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை அசைத்தபடி வந்தார். அவர் சரண் அடைவதாக கூச்சல் போட்டார்.
அவர் என் முகத்தை பார்த்ததும் என்னை நோக்கி சுட தொடங்கினார். சுடவேண்டாம் என்று கடாபி அவரை தடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் கடாபி இங்கே தான் இருக்கிறார். அவர் காயம் அடைந்து இருக்கிறார் என்று சத்தம் போட்டு கூறினார்.
நாங்கள் அவருடன் சென்று சாக்கடை குழாய்க்குள் இருந்த கடாபியை வெளியே கொண்டு வந்தோம். அப்போது அவர் கால்களில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை நாங்கள் காரில் ஏற்றினோம். இவ்வாறு பக்கீர் கூறினார்.
கடாபியை அவரது ஆதரவு படை வீரர்களே சுட்டுக்கொன்று விட்டனர் என்று அவர் கூறினார்.
ஆனால் காரில் கடாபியுடன் நகரின் முக்கிய பகுதிக்கு சென்றபோது மேலும் அதிகமான புரட்சிப்படை வீரர்கள் அங்கு வந்து விட்டார்கள். அவர்கள் கடாபியை காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர். இப்படி அடித்து உதைத்ததில் தான் அவர் இறந்து போனார்.
இறந்து போன அவரது உடலை புரட்சிப்படை வீரர்கள் தெருவில் இழுத்துச் சென்றனர்.
கடாபியை பிடித்தபோது அவர் தங்கத்துப்பாக்கியை வைத்து இருந்தார் என்றும் அதை தாம் பார்த்தாகாவும் ஒரு புரட்சிப்படை வீரர் கூறினார்.
No comments:
Post a Comment