நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பணமும், அதிகார மிரட்டலும் பல இடங்களில் முடிவுகளை தீர்மானித்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
4 கோடியே 80 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட, உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளுக்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, நகர்ப்புற, கிராமப்புற மக்கள் 3 கோடியே 60 லட்சம் பேர் தேர்தலில் பங்கேற்று வாக்களித்தது ஜனநாயக அமைப்பில் பங்கேற்க மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் 6 மாநகராட்சி மேயர்களாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாகவும், ஆயிரக்கணக்கில் மன்ற உறுப்பினர்களாகவும், பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதை வளர்ச்சியின் அடையாளமாக கருதலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெண் பிரதிநிதிகளுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொறுப்பேற்றுள்ள அனைவரும் மக்களின் அடிப்படை சுகாதார, குடிநீர், சாலை வசதி, கழிவுநீரை அகற்றுவது, போன்ற உள்ளாட்சி கடமைகளை முனைந்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முறைகேடுகள் பற்றியும், வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மிரட்டி வாக்குகளைப் பதிந்த புகார்களும், பல இடங்களில் சச்சரவு, கைகலப்புக்கள் நடந்ததாக புகார்கள் வந்த போதிலும், பரவலாக தேர்தல் ஒப்பீட்டு முறையில் பொதுவாக அமைதியாக நடந்தேறியது என்றே கூறலாம். வந்துள்ள புகார்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் அரசியல் பலப்பரீட்சைக்கு அவசியம் எழவில்லை. தொகுதி உடன்பாடு மட்டும் வைத்துக்கொள்ள எடுத்த முயற்சிகளும் பலனைத் தரவில்லை. கூட்டணி முயற்சி எதிர்பார்த்தவாறு அமையவில்லை. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்தே போட்டியிட்டது. ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் கிடைக்கும். இல்லையேல் கிடைக்காமல் போகலாம் என்ற கருத்து பரப்பப்பட்டதே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கிறது என்று கூறலாம்.
பணவிநியோகமும், அதிகார மிரட்டலும் சேர்ந்து தீர்ப்பை பல இடங்களில் வளைத்துள்ளன என்பதையும் மறைக்க முடியாது. இருப்பினும் தேர்தல் முடிவுகளை மக்களின் தீர்ப்பாக கம்யூனிஸ்டு கட்சி ஏற்று வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் சேத்தூர், சிவகிரி ஆகிய 2 பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கும் திருப்பூர் மாநகராட்சியில் நான்கு வார்டுகளிலும், திருவாரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் 10 வார்டுகளிலும் பேரூராட்சி மன்றங்களில் 33 வார்டுகளிலும் ஊராட்சி ஒன்றியங்களில் 46 வார்டுகளிலும், கிராம ஊராட்சி தலைவர்கள் 103 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வென்றவர்கள் மக்களுக்கு பாகுபாடின்றி செயல்படுவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment