பாதுகாப்பு காரணங்களைக் காரணம் கூறி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து தாமதப்படுத்துவது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், நாளை திட்டமிட்டபடி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது.
பெங்களூர் தனி கோர்ட்டில் பல காலமாக நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் முறையாக ஜெயலலிதா வருகிற 20ம் தேதி நேரில் ஆஜராகவுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே நேரில் வர சம்மதித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றி நேற்று முன்தினம்தான் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். 20ம் தேதியன்று பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதி்மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று கோர்ட் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திடீரென ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புது மனு ஒன்று தாக்கல் செய்யபப்பட்டது. அதில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. எனவே தன்னால் அங்கு போக முடியாத நிலை உள்ளது. எனவே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
ஆனால் இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக புதன்கிழமைக்குள், ஜெயலலிதாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முதல்வர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பதால் அவருக்கு அந்தப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் கோர்ட் வரை சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து தாமதம் செய்வது சரியல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முதல்வர் ஜெயலலிதா இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பின் கீழ் உள்ளார். அவரது பயணத்தை 96 மணி நேரத்திற்கு முன்பே திட்டமிட வேண்டும். எனவே தற்போது உடனடியாக பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவது இயலாத காரியம் என்றார். இதற்கும் நீதிபதிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று பிற்பகலில் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் எழுத்துப்பூர்வமான ஒகரு விளக்கம் அளிக்கப்பட்டது. டிஜிபி அளித்த விளக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக வரும்போது அவருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன.
அவரை விமான நிலையத்திலிருந்து கோர்ட் வரை கூட்டி வருவதற்கு சிறப்பு வாகனம், சிறப்பு போலீஸ் பாதுகாப்பு என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இசட் பிளஸ் பிரிவின் கீழ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார். இதேபோல தலைமைச் செயலாளரும் விளக்கம் அளித்திருந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதை ஏற்கிறோம்.எ னவே பாதுகாப்பு காரணங்களைக் காட்டி முதல்வர் ஜெயலலிதா தனது பெங்களூர் விஜயத்தைத் தள்ளிப் போட கோர முடியாது என்று கூறினர். மேலும், திட்டமிட்டபடி நாளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்றும் அவர்கள் அதிரடி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment