கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான வி.சோமண்ணாவை பாஜக தொண்டர் ஒருவர் தடுத்து நிறுத்தி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் சோமண்ணா பெரும் அதிர்ச்சி அடைந்தார். மாநில தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த தாக்குதலால் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
அமைச்சர் சோமண்ணாவைத் தாக்கியவரது பெயர் பி.எஸ்.பிரசாத். இவர் சிவில் காண்டிராக்டர் ஆவார், பாஜகவில் இருக்கிறார். விதான செளதாவில் உள்ள தனது அறையிலிருந்து வெளியே வந்த அமைச்சர் சோமண்ணாவை திடீரென தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரசாத். பின்னர் தனது செருப்பை எடுத்து பளாரென சோமண்ணாவை அடித்து விட்டார்.
அப்போது அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். சோமண்ணாவும் அதிர்ச்சி அடைந்து, உனக்கு நான் என்ன செய்தேன், ஏன் என்னை அடித்தாய் என்று கோபமாக கேட்டார்.
மேலும் அருகில் இருந்த சோமண்ணாவின் ஆதரவாளர்கள், பிரசாத்தை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு பிரசாத்தைப் பிடித்து அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான செளதாவில் பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி மறுத்துள்ளார். பாதுகாப்பில் எந்தக் குளறுபடியும் இல்லை. முதல்வரை சந்திப்பதற்கான அனுமதிக் கடிதத்துடன் பிரசாத் வந்துள்ளார். இதனால்தான் அவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அனுமதித்துள்ளனர். அவரும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் எழவில்லை என்றார் அவர். பின்னர் அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தார் மிர்ஜி.
இந்த சம்பவம் குறித்து சோமண்ணா கூறுகையில், நான் அந்த நபரை 2 முறை மட்டுமே இதுவரை சந்தித்துள்ளேன். இது எனது அலுவலகத்திற்கு அவர் 2வது முறையாக வந்துள்ளார் என்று நினைக்கிறேன். முன்பு ஒரு முறை அவர் பரிந்துரைக் கடிதம் கேட்டிருந்தார். நானும் கொடுத்தேன். ஆனால் ஏன் என்னை அடித்தார் என்பதுதான் தெரியவில்லை.
விதான செளதாவில் போலீஸார் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.
மூத்த அரசியல்வாதியும், அமைச்சருமான சோமண்ணாவை பாஜகவைச் சேர்ந்தவரே செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment