மத்திய மந்திரிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுக்கு பின்னால் ராகுல்காந்தியின் கைங்கர்யம் இருப்பது இப்போது வெளியாகி இருக்கிறது.
மத்திய மந்திரிகள் சிலர் ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கி வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.இன்னும்சிலர் மீது ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் மத்திய மந்திரிகள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். அதன்படி மந்திரிகள் அளித்த சொத்து விவரங்கள் தவிர அவர்களது மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் விவரங்களும் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.
மந்திரிகள் மட்டுமின்றி அவர்களது நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்களையும் வெளியிடச் செய்த மன்மோகன்சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. மத்திய அரசு வெளிப்படையாக செயல்படுவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கை என்று அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டன.
ஆனால் இந்த முடிவை எடுத்தது மன்மோகன்சிங் அல்ல. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தான் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மன்மோகன்சிங் மற்றும் மந்திரிசபை எடுக்கும் முக்கிய முடிவுகளில் ராகுல் காந்தியின் தலையீடு இருப்பது பட்டவர்த்தனமாகி உள்ளது.
மந்திரிகள் மட்டுமின்றி அவர்களது நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்களையும் வெளியிடச் செய்ய எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் பெற்றுள்ளார். அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் வருமாறு:-
கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அதில், தங்கள் தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விவரங்களை கேட்டு கேபினட் செயலாளர் மூலம் கடிதம் எழுதியுள்ள தகவலை சில மீடியாக்கள் வாயிலாக நான் தெரிந்து கொண்டேன். தங்களின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டுகிறேன். அதே சமயம் மந்திரிகள் அவர்களது சொத்து கணக்கை மட்டும் வெளியிட்டால் போதாது வெளிப்படை தன்மை முழுமை பெற வேண்டுமானால், மந்திரிகளின் மனைவி, பிள்ளைகள், தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் விவரங்களும் வெளியாக வேண்டும்.
எனவே மந்திரிகளின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் உடனடியாக பெற்று வெளியிடுவது அவசியம். அப்போதுதான் நோக்கம் முழுமை அடையும் என்று குறிப்பிட்டு உள்ளார். ராகுல் காந்தியின் இந்த யோசனையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து 2010, டிசம்பர் 9-ந் தேதி பிரதமர் அலுவலகம், கேபினட் செயலாளருக்கு ரகசிய குறிப்பு ஒன்றை அனுப்பியது. அந்த கடிதத்தில் ராகுல்காந்தியின் பரிந்துரைகள் மீது உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி உடனடியாக பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே மந்திரிகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்கள் கேட்டு பெறப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டன. மந்திரிசபையில் சேருமாறு பிரதமர் பலமுறை கேட்டுக் கொண்டும் ராகுல் மறுத்து விட்டார். மூத்தவர்கள் பலர் இருக்க இளையவனான நான் மந்திரிசபையில் சேர விரும்பவில்லை என்று ராகுல் மறுத்து விட்டார்.
மந்திரிசபையோ அல்லது பிரதமரோ எடுக்கும் முக்கிய முடிவுகளில் ராகுல் தலையிடுவதில்லை என்று பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்த கருத்தை இந்த விவகாரம் பொய்யாக்கி இருக்கிறது. மந்திரிகளின் உறவினர்கள் சொத்து விவரங்களை வெளியிடச் செய்ய பிரதமரை அவர் வலியுறுத்திய தகவல், மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ராகுலின் தலையீடு இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment