அதிமுகவிடம் கடைசி வரை கெஞ்சிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு தேமுதிகவிடம் வந்து சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கும் தனது விருப்பத்திற்கேற்ப இடம் கிடைக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அதிமுகவிடம் கேட்ட இடங்கள் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன் சட்டென முடிவெடுத்து தேமுதிகவிடம் வந்து விட்டது சிபிஎம். சட்டுப் புட்டென்று பேசி இடப் பங்கீட்டையும் முடித்துக் கொண்டது.
சிபிஎம்முக்கும், தேமுதிகவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி கோவை மேயர் பதவியில் சிபிஎம் போட்டியிடுவது எனவும், 19 வார்டுகளில் அக்கட்சி போட்டியிடுவது எனவும் தீர்மானமானது. மற்ற இடங்களில் தேமுதிக போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடைசியாக வந்து சேர்ந்த சிபிஐக்கு எதைத் தருவது என்பதில் குழப்பமாகிவிட்டது. தங்களுக்குக் கிடைத்த வார்டுகளை விட்டுத் தர சிபிஎம் மறுத்து விட்டது. சிபிஐ திருப்பூர், நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. அதற்கு தேமுதிக நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து உங்க சங்காத்தமே வேண்டாம் என்று வட சென்னையில் தனித்துப் போட்டியிடுகிறது சிபிஐ. இது தவிர திருப்பூர் மாநகராட்சியின் 35 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கூட்டணி டமார் ஆனதால் திருப்பூர், நெல்லை மேயர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்கள் அவற்றை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனி்தது களமிறங்குகிறது. பிரச்சார விவரங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வரும் 7-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். அதையடுத்து புதுக்கோட்டை (9-ம் தேதி), நெல்லை (10-ம் தேதி), சிவகங்கை (11-ம் தேதி), கிருஷ்ணகிரி (12-ம் தேதி), தர்மபுரி (13-ம் தேதி), சென்னை (14-ம் தேதி), மதுரை (15-ம் தேதி), விருதுநகர் (16-ம் தேதி) ஆகிய இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இதே போன்று ஆர். நல்லக்கண்ணு, சி. மகேந்திரன், பழனிச்சாமி, கோபி, தியாகராஜன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
No comments:
Post a Comment