திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால் அறிவிக்கப்பட்டவர், நான் போட்டியிடவே விரும்பவில்லை. விருப்பமில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிறகு ஏன் அறிவித்தார்கள் என்று கேட்டு காங்கிரஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருச்சி மேயராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா. இவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர். நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மேயர் வேட்பாளராக சுஜாதா போட்டியிடுவார் என தங்கபாலு தற்போது அறிவித்துள்ளார். ஆனால் சுஜாதா ஏன் எனது பெயரை அறிவித்துள்ளனர் என்று கேட்டு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திருச்சியில் உள்ள சில காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு பழிவாங்க வேண்டும் என்பதால், நான் விருப்பம் தெரிவிக்காத போதும், வேண்டுமென்றே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தின்போது, அனைவரும் ஏகமனதாக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் உறுப்பினருக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வேண்டுமென்றே எனது பெயரை இப்போது அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து தலைமைக்கு தெரியப்படுத்துவேன் என்றார் அவர்.
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று ஏற்கனவே சுஜாதா கட்சியிடம் தெரிவித்தும் கூட அவரை தங்கபாலு வேட்பாளராக அறிவித்தது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
தற்போது சுஜாதா வேட்பு மனுத் தாக்கல் செய்வாரா இல்லையா என்ற பெரும் குழப்பத்தில் காங்கிரஸார் உள்ளனர்.
No comments:
Post a Comment