தமிழக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மோதலை தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த பின்னர் மாலையில் தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னை மாநகராட்சிக்கு 48 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளுக்கு அதிகபட்சமாக 68 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியது. கிராமப்பகுதிகளில் 78 சதவீதம், ஊரக பகுதிகளில் 78 சதவீதம்,பேரூராட்சிகளில் 72 சதவீதம், நகராட்சிகளில் 72 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இன்று நடந்த தேர்தலில் ஓட்டுப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை. குறிப்பிட்ட 48 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என தி.மு.க., புகார் கூறியுள்ளது. மற்றபடி தேர்தல் மோதல் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திகள. விளம்பரத்துக்காகவும் புகார் கூறப்பட்டுள்ளது. புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
நீலகிரியில் 69 சதவீத ஓட்டுக்கள்பதிவு: நீலகிரி மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 69 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. ஊட்டியில் கனமழை காரணமாக கடந்த தேர்தலை காட்டிலும் ஓட்டு சதவீதம்குறைந்துள்ளது.
நாகையில் 79 சதவீத ஓட்டுக்கள் பதிவு: நாகையில் 1 நகராட்சி, 4 பேரூராட்சி, 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 79 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
வேலூரில் 65% ஓட்டுப்பதிவு:தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் 65 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
நகராடசி தலைவர் வேட்பாளர் மீது தாக்குதல்: ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக அப்துல் ஹக் என்பவர் போட்டியிடுகிறார். நகராட்சியின் 16வது வார்டில் கள்ள ஓட்டு போடப்படுவதாக அப்துல் ஹக்கிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கு சென்றார். அங்கிருந்த கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வின் ராஜா ஹூசைன் மற்றும் இலியாஸ் ஆகியோர் சேர்ந்து அப்துல் ஹக்கை தாக்கினர். இதில் காயமடைந்த அப்துல் ஹக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை அருகே தேர்தல் ரத்து : நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட பரமேஸ்வரபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு 2 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 250 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஒரு பூத்தில் வழங்கப்பட்ட ஓட்டுச்சீட்டில் 2 வேட்பாளர்கள் பெயர்களுக்கு பதிலாக 5 பேரது பெயர்கள் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தன. இதனால் குளறுபடி ஏற்பட்டது. இதனையடுத்து இங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்., - பா.ஜ., மோதல்: போலீஸ் தடியடி: ராமநாதரபுரம் நகராட்சிக்கு 25வது வார்டுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோபி என்பவரும், பா.ஜ., சார்பில் கோபி என்பவரும் போட்டியிடுகின்றனர். சுவாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டுபோடுவது தொடர்பாக இரு கட்சிகளுககும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு நடந்தது. இந்த மோதல் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. போலீசார் விரைந்து வந்து தடியடி நடத்தி கலைத்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் கோபி உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து செய்து அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment