கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அணு மின் நிலைய வளாகத்திற்குள் சிக்கியிருக்கும் கிட்டத்தட்ட 1000 பேருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வரும் பாதைகள் அனைத்தையும் முற்றுகையிட்டு கிராம மக்களும், அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் எந்த வாகனமும் அணு மின் நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு மின் நிலையத்தில் பணியாற்றி வரும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளேயே தங்கியுள்ளனர். அவர்கள் யாரும் வெளியேறவில்லை. அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் உணவு உள்ளிட்டவை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அணு மின் நிலைய அதிகாரிகள் செய்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தால், அணு மின் நிலைய வளாகத்திற்குள் எந்தப் பணியும் நடக்கவில்லை. முடங்கிப் போயுள்ளது. மேலும் அங்கு அசாதாரணமான சூழலும் நிலவுகிறது. இதுவரை பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. இருப்பினும் உள்ளே இருப்போர் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். அதேபோல யாரும் அணு மின் நிலையம் உள்ள பகுதிக்கு வர முடியாமல் மககள் தடுத்து வருகின்றனர்.
உள்ளேயே தங்கியுள்ள 900 ஒப்பந்த ஊழியர்களும் கூட வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உ.பி., மேற்கு வங்கம், பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment