தொடரும் அதிகநேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் மக்களின் ஓட்டு அரசுக்கு எதிராக திரும்பும் என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்
முந்தைய திமுக அரசின் தோல்விக்கு மிகவும் முக்கிய காரணமாக மின்வெட்டு அமைந்தது. தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்முன் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அதிமுக அரசு பதவியேற்று 4 மாதங்களாகியும் மின்வெட்டை சீர் செய்வதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எண்ணும் அளவிற்கு தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியிலாவது சொல்லி விட்டு மின்சாரத்தை ரத்து செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது மின்வெட்டு அமலாவதால் மக்கள் குமுறலுடன் உள்ளனர்.
மேலும் தற்போது அக்னி நட்சத்திர வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு வரலாறு காணாத வெயில் கடந்த பல தினங்களாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே தலைகாட்டவே மக்கள் பயப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால் அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மின்தடை மக்களை பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 2 மணி நேரம், 3 மணி நேரம் மின்வெட்டு சர்வ சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை.
சட்டசபைத் தேர்தலில் அரசுக்கு எதிரான வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது.
உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி வரும் தற்போதைய சூழ்நிலையில் நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி விவசாயப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை இல்லாமல் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம் போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால் மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. .
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பாதிக்குமோ, ஷாக் அடிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பழைய ஆட்சிக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணும் அளவிற்கு மின்வெட்டு அமலில் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றனர். உடனடியாக 3 மணிநேர மின்வெட்டை மாற்றி அமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மின்வெட்டை முன்னறிவிப்புடன் நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment