மேற்கத்திய நாடுகள் ஆயுத பலத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் மம்மர் கடாபிக்கு தன் மேல் ஒருவித மயக்கமே இருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கண்டோலிசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
கண்டோலிசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவருக்கும் கடாபிக்கும் கடந்த 2008-ல் ட்ரிபோலியில் நடந்த சந்திப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்குப் பிறகுதான் லிபியா ஜனநாயகப் பாதைக்கு திரும்பும் என கடாபி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பை தனது தனிப்பட்ட முகாம் அறையில் வைத்துக் கொள்ள விரும்பினாராம் கடாபி. ஆனால் அவரது மாளிகையில் சந்திப்பதாகக் கூறிவிட்டாராம் ரைஸ்.
'ஏன் என் ஆப்ரிக்க ராஜகுமாரி என்னை இன்னும் பார்க்க வரவில்லை' என்று அப்போது தன் உதவியாளர்களிடம் குறிப்பிட்டாராம் கடாபி.
கண்டோலிசாவை முதலில் சந்தித்ததும் கொஞ்சம் 'வழிந்த' கடாபி, சட்டென்று சுதாரித்து தனது நிலைக்குத் திரும்பிவிட்டாராம். பின்னர் தலையை முன்னும் பின்னும் ஆட்டியபடி, "போய் புஷ்ஷிடம் (அன்றைக்கு அவர்தான் அமெரிக்க அதிபர்) சொல்லுங்கள்... இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் என்ற தீர்வு சரியல்ல. பாலன்ஸ்டைன் என ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும்," என்றாராம்.
அடுத்து கண்டோலிசா சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத கடாபி, தனது உதவியாளர்களை அழைத்து, சந்திப்பு ஓவர் என்பதைப் போல சொல்ல, 'கடாபி இப்படித்தான் போலிருக்கிறது' என நினைத்தாராம் கண்டோலிசா.
பின்னர், கண்டோலிசாவை தனது தனி உணவறைக்கு வரவழைத்து விருந்தளித்த கடாபி, கண்டோலிசா உலகத் தலைவர்களைச் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை சேகரித்து தான் தயாரித்த ஆல்பத்தைக் கொடுத்தாராம். கூடவே, கண்டோலிசாவுக்காக லிபிய இசையமைப்பாளரைக் கொண்டு தான் உருவாக்கிய 'வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு ரோஜா' என்ற பாடலை பரிசாகத் தந்தாராம்!
No comments:
Post a Comment