வறுமையில் வாடும் தனது தந்தை வர்கிக்கு நடிகை லிஸி மாதந்தோறும் ரூ 5500 உதவி வழங்க வேண்டும் என்று கொச்சி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் வர்கி என்பவர் எனது தந்தையே இல்லை என்றும், தனது தந்தைதான் என்பதற்கு ஆதாரம் காட்டினால் பணம் தருவேன் என்றும் லிஸி கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசி. இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். லிசியின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புக்கட்டுப்பாடி. லிசியின் தந்தை வர்கி சொந்த ஊரில் வறுமையில் கஷ்டப்படுவதாகவும் அவரை லிசி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.
சமீபத்தில் லிசி தனக்கு பண உதவி செய்ய உத்தரவிட கோரி கொச்சி கோர்ட்டில் வர்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மாதந்தோறும் வர்கிக்கு லிசி ரூ.5500 வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். ஆனால் லிசி பண உதவி செய்யவில்லை.
வர்கி எனது தந்தை இல்லை என மறுத்தார். கோர்ட்டு உத்தரவு நகல் தனக்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது கொச்சி மாவட்ட கலெக்டர் சேக்பிரீத் நடிகை லிசி தனது தந்தை வர்கியின் பராமரிப்பு செலவுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். வர்கி தன்னை நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும் வருவாய் அதிகாரியிடம் இப்பிரச்சினையை கவனித்துக் கொள்ளும்படி கூறி இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
மாவட்ட தலைமை நீதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பவர் என்பதால் கலெக்டர் உத்தரவு நீதிமன்ற உத்தரவுக்குச் சமமாகும்.
இது குறித்து லிசியிடம் கேட்ட போது வர்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வயது முதல் என் தந்தையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு தெரியாத ஒருவருக்கு பண உதவி செய்ய முடியாது. எனது பள்ளி சான்றிதழில் தந்தை பெயர் ஜார்ஜ் என்று இருக்கிறது. வர்கி பெயர் இல்லை. எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் அதன் பிறகு பண உதவி செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது தாய்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்
எனக்கு தந்தை இருந்திருந்தால் படிப்பு செலவை கவனித்து இருப்பார். சாப்பாடு, சீருடை புத்தகங்கள் எல்லாவற்றையும் தந்து இருப்பார். எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு தந்தை என்று சொல்பவரை பார்த்ததே இல்லை. அவர்களிடம் நேரில் கூட விசாரித்துக் கொள்ளலாம். தந்தைக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது பற்றி என் கவனத்துக்கு எதுவும் வர வில்லை," என்றார்
No comments:
Post a Comment