புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் அபார வெற்றி பெற்றார். அத்தொகுதியில் காங்கிரஸ் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற்றது. அதிமுக உள்பட 5 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று இந்திரா நகர். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரா நகர் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தனது அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை வேட்பாளராக நிறுத்தினார் ரங்கசாமி.
காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் ஆகியோர் உள்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.
இன்று அங்கு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்திலிருந்தே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்ச்செல்வன் நல்ல முன்னிலையில் இருந்து வந்தார்.
இறுதியில் அவர் 15,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்திற்கு 7007 வாக்குகள் கிடைத்தன. அதிமுக வேட்பாளர் பாஸ்கரன் தொடக்கத்திலிருந்தே மிகவும் பின்தங்கியிருந்தார். இறுதியில் அவருக்கு 1578 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் பாஸ்கரன் டெபாசிட்டைப் பறி கொடுத்தார். மற்ற 4 வேட்பாளர்களும் கூட டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
அதிமுகவுக்கு ரங்கசாமியின் பதிலடி
அதிமுகவுக்கு புதுவையில் பெரிய அளவில் பலம் இல்லை. ஆனால் ரங்கசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். இதனால்தான் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, ரங்கசாமி கட்சியுடன் கூட்டணி வைத்தது. ஆனால் தேர்தல் முடிந்த கையோடு கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது அதிமுக. அத்தோடு நில்லாமல் ரங்கசாமியை மிகக் கடுமையாக தாக்கிப் பேசத் தொடங்கியது.
இதற்கு பெரிய அளவில் எந்தப் பதிலும் தராமல் அமைதியாக இருந்து வந்தார் ரங்கசாமி. ஆனால் தற்போது தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்து விட்டார் ரங்கசாமி. இதன் மூலம் அதிமுகவுக்கு ரங்கசாமி சரியான பதிலடி கொடுத்துள்ளதாக என்.ஆர். காங்கிரஸார் கூறுகின்றனர்.
கடந்த முறையை விட இப்போது குறைவான வாக்குகள்
தொகுதியை மீண்டும் கைப்பற்றி விட்டாலும் கூட கடந்த முறையை விட இந்த முறை என்.ஆர். காங்கிரஸுக்கு ஓட்டுக்கள் குறைவாகவே கிடைத்துள்ளன.
கடந்த முறை இங்கு போட்டியிட்ட என்.ரங்கசாமிக்கு 20,685 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 15,053 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. இதன் மூலம் கடந்த முறையை விட இந்த முறை 5632 வாக்குகள் குறைந்துள்ளன.
இதற்கு அதிமுக பிரிந்தது மட்டும் காரணமா அல்லது உள்ளடி வேலைகள் காரணமா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் உள்ளடி வேலைகளே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், இந்தத் தொகுதியைப் பிடிக்க ரங்கசாமி கட்சியில் பலரும் கடுமையாக முயன்றனர். அவரை மிரட்டிக் கூடப் பார்த்தனர். ஆனால் அவர் மசியவே இல்லை. கடைசியில் சத்தம் போடாமல் தனது அண்ணன் மகனை வேட்பாளராக்கி விட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளன்று, கடைசி நிமிடத்தில்தான் மனுவையே தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment