மும்பையில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா சார்பில் செங்கடல் என்று படம் தேர்வாகியுள்ளது. மும்பையில் 13வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. அக்டோபர் 13ம் தேதி முதல் 20 வரை நடக்கும் இவ்விழாவில் பல்வேறு நாட்டை சேர்ந்த திரைப்படங்கள் பங்கேற்றுள்ளன. அதில் இந்தியா சார்பில் போட்டியிட தேர்வாகியிருக்கும் ஒரே படம் செங்கடல் தான். இந்திய இலங்கை எல்லைக் கிராமமான, எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிற படம் தான் செங்கடல்.
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியிருப்பது குறித்து படத்தின் டைரக்டர் சீனிவாச நாராயணன் கூறுகையில், புதிய அணுகுமுறையும், அற்புதமான படக்காட்சியும், தேர்வுக்குழுவினரை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இப்படத்தை தேர்வு செய்துள்ளனர் என்றார்.
அரசியல் விமர்சனங்களுக்காக செங்கடல் படத்தை பொது இடங்களில் திரையிட தடை விதித்து இருந்தது தணிக்கை குழு. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் ஏ சான்றிதழை ஜூலையில் பெற்றது. அதன் பிறகு ஜூலையில் நடைபெற்ற 32ஆவது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச திரைப் பட விழாவிலும், ஆகஸ்டில் 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தேர்வு பெற்று பங்கேற்றது. இந்த மாதம் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் என்.ஏ.டபிள்யூ.எப்.எப். விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிப்பான செங்கடல், அமெரிக்காவின் க்ளோபல் பிலிம் இனிஷியேடிவின் 2010 - ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு ஊக்குவிப்பு வெகுமதியையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment