கேபிள் டி.விக்களில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் சினிமா டிரைலர், பாடல்கள், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை ஒளிபரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் உள்ளூர் தொலைக்காட்சிகளில் (கேபிள் டி.வி.) தமிழ் திரைப்படங்களின் பாடல்களை, டிரெய்லர், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை ஒளிபரப்பும் உரிமத்தை கடந்த ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு - உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஜீவா, செயலாளர் செந்தில்குமார் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்பந்தம் கடந்த 30.9.2011 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. மேற்கொண்டு நாங்கள் யாருடனும் கேபிள் டி.வி. சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஆனாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் அனுமதியின்றி ஒளிபரப்பி வருகிறார்கள். எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒளிபரப்புவது சட்டப்படி குற்றம். ஆகவே, இன்றைய தேதியில் இருந்து அப்படி யாராவது திரைப்படங்களின் டிரெய்லர், பாடல்கள், கிளிப்பிங்ஸ், படத்துணுக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறிள்ளார்.
No comments:
Post a Comment