அபாயகரமான பழவேற்காடு ஏரியில், 5-6 பேருக்கு மேல் போகக் கூடாத, சாதாரண மீ்ன்பிடி படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால்தான் விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 25 பேரை அந்தப் படகில் ஏற்றிச் சென்றதால்தான் படகு கவிழ்ந்து 22 பேரின் உயிரைக் குடித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை அருகே உள்ளது புலிகாட் லேக் எனப்படும் பழவேற்காடு ஏரி. அக்கம் பக்கத்தினருக்கும், சென்னை மக்களுக்கும் இது ஒரு சுற்றுலாத்தலம் என்பதால் அடிக்கடி பலர் இங்கு வருவது வழக்கம். மீனவர்களின் மீ்ன்பிடி படகில் உயிரைப் பணயம் வைத்து படகு சவாரி செய்வதும் நடந்து வருகிறது.
இந்தப் படகு சவாரி அபாயகரமானது என்பதை யாரும் உணர்வதில்லை. காரணம், சாதாரண மீன்பிடி படகான இதில் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் போவது கூடாது. ஆனால் பணத்திற்காக மீனவர்கள் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வது தொடர் கதையாக உள்ளது.
அப்படித்தான் நேற்று கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் நாடார் என்பவர் தனது குடும்பத்தினரோடு போய் மொத்தமாக உயிரைப் பறி கொடுத்துள்ளார்.
புதுக்கும்முடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (64). இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டமாகும். இவர் தனது மனைவி, மகன்கள்,மகள்கள், பேரப்பிள்ளைகளுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் மதியம் 2 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு வந்தனர்.
சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் 23 பேர் ஒரு மோட்டார் படகில் ஏறினர். அந்த படகு அப்பகுதியில் மீன்பிடிக்கும் படகு. அந்தப் படகை ஓட்டியவர் அன்சாரி. படகில் அன்சாரியின் மனைவியான 26 வயதான நசீரா பானுவும் பயணித்தார்.
ஏரி, கடல் தொடங்கும் இடமான முகத்துவாரம் வரை வந்தபோது சிலர் கடலுக்குள் போய் வரலாம் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அது அபாயகரமானது என்று அன்சாரி கூறியுள்ளார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் படகில் இருந்தவர்கள் கடலுக்குள் போகலாம் என்று வலியுறுத்தியதால் அன்சாரி படகை கடலுக்குள் திருப்பினார்.
கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது. அலைகளும் பெரிதாக இருந்தன. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அன்சாரி படகை கடலுக்குள் விட்டார். அப்போது பெரிதாக வீசிய அலையில் படகு அப்படியே கடலுக்குள் தள்ளப்பட்டது.
படகு கவிழ்ந்ததையும் அதில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்ததையும் கரையில் இருந்த மீனவர்கள் சிலர் பார்த்து தஙக்ளது படகுகளுடன் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் படகில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் மூழ்கி விட்டனர். மூன்று சிறுவர்கள் மட்டும் கயிற்றைப் பிடித்து படகை இறுக்கப் பிடித்து உயிர் தப்பித் தத்தளித்தனர். அவர்களை முதலில் மீனவர்கள் மீட்டனர். ஆனால் மற்ற 22 பேரையும் மீட்க முடியவில்லை.
போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்களுடன் விரைந்து வந்தனர்.அனைவரும் சேர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். படகோட்டி அன்சாரி உயிர்தப்பி விட்டார். அவரைப் போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி நசீரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனதாம். புதுப் பெண் என்பதால் நசீராவையும் படகுப் பயணத்திற்கு அழைத்து வந்திதருந்தார் அன்சாரி.
இந்த விபத்தில்,
சுந்தரபாண்டியன், மனைவி ஜெயஜோதி (60), மகன் ஜெயதுரை (45), மருமகள் சுந்தரமேரி (42), பேத்தி ரோஸ்லின் மேரி (13), மகன் ஆசீர்வாதம் (38), மருமகள் ஜனனி (31), பேத்தி மெர்லின் (12), பேரன் சார்லி (6), மகன் கனகராஜ் (35), மருமகள் 13. பியூலா (28), பேரன்கள் ஜோஸ்வா (4), இம்மானுவேல் (1), மகன் தங்கராஜ் (33), மருமகள் வசந்தா (24), பேத்தி ஜுலியட் ( 6 மாதம்), மகள் பாக்கியமணி (40), மருமகன் டேனியல் (45), பேரப்பிள்ளைகள் கோயில்ராஜ் (16), மனோஜ் (12), சுந்தரபாண்டியனின் கடையில் வேலை பார்க்கும் அனிதா (20), நசீரா பானு ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக பால் தினகரன், ஜனகராஜ் சாமுவேல், பவுல் ராஜ் ஆகியோர் மட்டும் உயிர் பிழைத்தனர். மூன்று பேரும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பாலன் தினகரன் கூறுகையில், படகு கவிழ்ந்ததும் நாங்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டோம். உடனடியாக நானும் எனது சகோதரன் ஜனகராஜ் சாமுவேல் மற்றும் பவுல் ராஜ் ஆகியோர் படகில் தொங்கி கொண்டிருந்த கயிற்றினை பிடித்து படகின் மேல் ஏறினோம். மீட்பு பணிக்காக படகில் வந்தவர்கள் எங்களை மீட்டனர். படகில் கவிழ்ந்ததால் அனைவரும் மாட்டி கொண்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று அழுதபடி கூறினான்.
மொத்தக் குடும்பமே நீரில் மூழ்கி பலியாகி விட்ட துயரச் செய்தியை அந்த சிறுவர்களுக்கு இன்னும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா வந்து மொத்தக் குடும்பமே பலியான சோகம் அப்பகுதி மக்களை பெரும் வருத்தத்தி்ல ஆழ்த்தியது.
No comments:
Post a Comment