தமிழகத்தின் தயவின்றி கேரளாவால் வாழவே முடியாத நிலைதான் உள்ளது. தமிழர்கள் இப்போது கிளர்ந்தெழுந்துவிட்டனர். எனவே அணையை உடைக்க அவர்களால் இனி முடியாது, என வைகோ கூறினார்.
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினார்கள்.
இதில், வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடந்த கூட்டத்தில் மக்களிடையே மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.
அவர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள மந்திரி சொல்கிறார். மேலும், அந்த அணையை உடைப்பதால் கிடைக்கும் கற்குவியலை சாலைகள் அமைக்க பயன்படுத்துவோம் என்றும் கூறுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை பற்றி மத்திய அரசிடம் கேரள அரசு கொடுத்த அறிக்கையில், முல்லை பெரியாறு அணை 2 மாநில பயன்பாட்டுக்கு அல்ல. கேரளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி மலையில் இருந்துதான் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் செல்கிறது. இந்த அணையில் நமக்குள்ள பாத்தியதை இயற்கையானது.
கேரளா நமது தயவு இல்லாமல் வாழவே முடியாது. ஏனென்றால், அங்குள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி என சகலமும் தமிழகத்திலிருந்துதான் போயாக வேண்டும்.
அதனால், மத்திய போலீஸ் படை அங்கு பாதுகாப்புக்கு வராவிட்டாலும், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடியாது. ஏனென்றால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர். இந்த எழுச்சியைப் பார்த்து மிரண்டு நிற்கும் கேரளா, வறட்டுத்தனமாக புதிய அணை கட்டுவதாகப் பேசி வருகிறது.
இந்தப் பேச்சை முற்றாக நிறுத்திக் கொண்டு, பழையபடி 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்," என்றார்.
தங்கர் பச்சான்
இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், "முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக, கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் ஒன்றாக கூடி பிரதமரை போய் சந்திக்கிறார்கள். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் எங்கே போனார்கள்?
கேரள எம்.பி.க்களும் பிரதமரை ஒன்றாக சந்தித்தார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் பிரதமரை தனித்தனியாக போய் சந்திக்கிறார்கள். ஏன் இந்த நிலை? இனியாவது தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் உரிமைப் பிரச்சினை என்று வரும்போது, அனைத்து அரசியல் தலைவர்களும் சொந்தப் பிரச்சினைகளை மறந்து ஒரே மேடையில் கூடவேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment