வங்கக்கடலில் உருவான `தானே' புயல் கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் `தானே' புயல் நிலைகொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6.30-7.30 மணியளவில் இந்த புயல் புதுச்சேரி-கடலூருக்கு இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த `தானே' அதி தீவிர புயல் இன்று (நேற்று) காலை 6.30-7.30 மணிக்கு புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது. அப்போது புதுச்சேரியில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூரில் 87 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசியது. இந்த நேரத்தில் 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பும் இருந்தது.
காலை 8.30 மணி நிலவரப்படி கடலூருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலைகொண்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தீவிர புயல் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் அருகே கரை கடந்த புயல், பகல் 11.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிச்செல்லும் செல்லும் வாய்ப்பு உள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து சேலம் அருகே தாழ்வு பகுதியாக மாறி வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது பலத்த காற்று வீசும் கூரை வீடுகள் சேதமடைய கூடும். மின்கம்பங்கள், தொலை தொடர்பு இணைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை அல்லது கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் மேகம் முட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகப்பட்சமாக 15 செ.மீ மழை பெய்துள்ளது. கல்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழையும், கடலூர், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், செங்கல்பட்டு, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், அண்ணாபல்கலைக்கழகம், டிஜி.பி. அலுவலகம், நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், வானூர், சீர்காழி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இவ்வாறு ரமணன் கூறினார்.
வடக்கிழக்கு பருவமழை காரணமாக ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 44 செ.மீ. மழை கிடைக்கும். அந்த அளவை இந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்திலேயே வடக்கிழக்கு பருவமழை மூலம் கிடைத்தது. தற்போது புயல் காரணமாக பெய்த மழையால் இதுவரையில் 53 செ.மீ மழை தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment