ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக கோவன் 68 ரன்களும், பாண்டிங் 62 ரன்களும், சிடில் 41 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 214 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. காம்பீர் 3 ரன்களும், சேவாக் 67 ரன்களும், டெண்டுல்கர் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்திருந்தனர்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி நல்ல வலுவான நிலையில் இருந்தது. டிராவிட் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே திணறியது. டிராவிட் (68) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து லஷ்மண் (2), கோக்லி (11), தோனி (6), இஷாந்த் சர்மா (11), ஜாகீர்கான் (4), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தமிழக பந்துவீச்சாளர் அஸ்வின் கடைசி வரை போராடி 31 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 61 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஹில்பான்காஸ் 5 விக்கெட்டுகளும், சிடில் 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. பாண்டிங் 15 ரன்னும், ஹஸ்ஸி 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment