தமிழ்கத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் செல்வது குறைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கமுடியாமல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திணறி வருகிறது. நிலைமையை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து அதிக விலைக்கு காய்கறிகளை வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தால் சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமல் உள்ளூர் ஐயப்பன் கோவிலில் மாலைகளை கழட்டி விரதத்தை முடிக்கின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சபரிமலைக்கு தமிழக பக்தர்களின் வருகை நின்று போனதால் கோயில் வருமானம் குறைந்து வருகிறது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் செல்லாததால் சபரிமலையில் அன்னதானம் வழங்குவதிலும் தேவசம்போர்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரி்மலையில் தேவசம்போர்டு சார்பிலும், ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும், விஸ்வ இந்து பரிஷத், ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைப்பு சார்பிலும் 5 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுமார் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான காய்கறிகள் முழுவதும் தமிழ்கத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையால் தமிழகத்தில் இருந்து காய்கறி செல்வது குறைந்துவிட்டது. தேவசம்போர்டின் 2 அன்னதான மையங்களில் தினமும் காலையில் உப்புமா, கடலைக்குழம்பு, சுக்கு காப்பி, மதியம் சாப்பாடு, சாம்பார், அவியள், தோரன், ரசம், ஊறுகாய், இரவில் கஞ்சி, பயிறு ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு அன்னதான மையங்களில் தினமும் 20,000க்கும் அதிகமான பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து இங்கு உணவு தயாரிப்பதும் குறைந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
No comments:
Post a Comment