வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. மறுநாள் (26-ந்தேதி) அது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அது சென்னையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மிகத் தீவிரமாக வலுவடைந்து புயலாக மாறியது.
இதையடுத்து அந்த புயலுக்கு "தானே'' என்று இந்திய வானிலை ஆய்வுக் கழகம் பெயர் சூட்டியது. இந்த பருவ மழை சீசனில் உருவான இரண்டாவது புயல் இதுவாகும். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த தானே புயல் நேற்று மதியம் 500 கி.மீ. தொலைவுக்கு நெருங்கி வந்தது.
அந்த புயல் நகரும் திசையை கணித்த வானிலை ஆய்வாளர்கள், அது தமிழ்நாட்டின் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என்று அறிவித்தனர். சென்னையை குறி வைத்து தானே புயல் நகர்ந்து வந்ததால், தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தது.
வழக்கமாக வங்கக்கடலில் உருவாகும் புயல் முதலில் மேற்கு நோக்கி தமிழ்நாட்டை குறிவைத்தே வரும். பிறகு பெரும்பாலும் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தை துவம்சம் செய்து விடும். தானே புயலின் நகர்தலும் அப்படித்தான் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தானே புயலின் நகரும் திசையில் நேற்று இரவு முதல் மாற்றம் ஏற்பட்டது. 400 கி.மீ. தொலைவில் அது வந்த போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தானே புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அந்த புயல் முழுக்க - முழுக்க தமிழகத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை தமிழ்நாட்டை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று காலை 7.30 மணிக்கு வானிலை மையம் அறிவித்துள்ள சிறப்பு தகவல் வருமாறு:-
தானே புயல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. அது இன்றிரவுக்குள் தமிழக கடற்கரையை மிகவும் நெருங்கி வந்து விடும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை தானே புயல் சென்னைக்கும் - நாகப்பட்டினத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும். அப்போது 105 கி.மீ. வேகத்தில் மிக, மிக பயங்கரமான சூறாவளிக் காற்று வீசும்.
தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும், குளிர்காற்று தாங்க முடியாதபடி இருக்கும். கடலில் சீற்றமும், கொந்தளிப்பும் காணப்படும். எனவே கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மீனவர்கள் கடலோரத்தில் மீன் பிடிப்பதை கூட தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தானே புயல் தமிழக கடற்கரையை நெருங்க, நெருங்க சூறைக்காற்று வேகம் அதிகரிக்கும். இன்றிரவு சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். கூரை வீடுகள், மின் கம்பங்கள், மரங்கள், பாதிக்கப்படலாம். இதை கருத்தில் கொண்டு மக்கள் இன்றிரவு மிக, மிக உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 120 கி.மீ. வரை கூட இருக்கலாம். மழை 200 மி.மீ. அளவு வரை பெய்யலாம் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment