தமிழக அரசு கடன் சுமை தாங்க முடியாமல் தத்தளிக்கின்றது. அதனால் மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி அளித்தது போன்று தமிழகத்திற்கும் தாருங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்த முதல்வர் ஜெயலலிதா அவரிடம் 16 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.
இது குறித்து அவர் பிரதமரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.40,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தக் கழகத்துக்கு ரூ.50,000 கோடி கடன் சுமையும் இருக்கிறது.
இந்த பொதுத்துறை நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் தேவை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 1,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இந்த மின் பற்றாக்குறையைப் போக்க மின்வெட்டை அமல்படுத்த வேண்டியுள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டமும், கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டமும் (2000 மெகாவாட்) தாமதமாகின்றன. எனவே, மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும்.
காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்காக ரூ.2, 752 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று மரபுசாரா எரிசக்தி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அந்தத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும்.
தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து 1,500 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்களையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதில் தமிழகத்திற்கான பங்கை 69.4 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
நிலக்கரி அனுமதி கிடைக்காததால் எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவுப்படுத்துவது உள்பட பல்வேறு திட்டங்கள் தாமதமாகின்றன. இதற்கான அனுமதியை உடனடியாக வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
கடன் சுமை தாங்க முடியவில்லை
தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. 3,000 கோடிக்கும் மேலாக வருவாய் பற்றாக்குறை இருக்கிறது. இதனை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நிலைமை சீரடையவில்லை. எனவே, மதிப்பு கூட்டு வரி மற்றும் கலால் வரியை உயர்த்தியுள்ளோம். இருந்தாலும், கடன் சுமையில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. இதன்காரணமாக வளர்ச்சிப் பணிகள் பாதித்துள்ளன.
பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு நிதியை வழங்கி வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்காளத்திற்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிற்கும் சிறப்பு நிதி வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும்.
தேசிய சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள கடன் வட்டியைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. தேசிய சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ரூ.228 கோடி கடனுக்கான வட்டி தள்ளுபடி பெறுவதற்கும், ரூ.212 கோடி கடன் தள்ளுபடி பெறுவதற்கும் தமிழகத்திற்கு தகுதி உள்ளது. எனவே, அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
உணவுப் பாதுகாப்பு மசோதா
மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள அம்சங்களை அமல் செய்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.1,800 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதில் மத்திய அரசு எந்த பங்களிப்பும் தராது.
மேற்படி மசோதாவின் அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஏற்க முடியாததாகவும் உள்ளன. தமிழகத்துக்கு இப்போது அளிக்கப்படும் அரிசி மற்றும் உணவு தானிய ஒதுக்கீட்டு அளவை தொடர்ந்திட வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும் பழைய நிலை அளவுக்கு உயர்த்திட வேண்டும்.
மக்களுடன் நெருங்கிய தொடர்பில் மாநிலங்கள் இருக்கக் கூடிய கூட்டாட்சி முறையில், மக்கள் நலத் திட்டங்களை உருவா க்கும் பொறுப்பை மாநிலங்களிடமே விட்டுவிடுவதுதான் சிறந்ததாக இருக்கும். எனவே தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா வரம்பில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment