Friday, December 30, 2011

இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் 3’. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் கூறியதாவது: ஒய் திஸ் கொலவெறிபாடல் உலகம் முழுவதும் என்னை அறிய வைத்திருக்கிறது. இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து, நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்தி உட்பட பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை. சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். 3படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக நினைக்கிறேன். இந்த எதிர்பார்ப்பை மற்றப் படங்களிலும் ஈடுசெய்வேன். இவ்வாறு அனிருத் கூறினார்.


2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!


2011-ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா முத்துக்குமார்.

தமிழ் சினிமாவில் வாலி, வைரமுத்துவுக்குப் பிறகு, நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார் நா முத்துக்குமார்.

இந்த 2011-ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை 38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத் தந்துள்ளார் நா முத்துக்குமார்.

இந்த ஆண்டு ஹிட்டான அவரது பாடல்களில் முக்கியமானவை உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்..., கோவிந்த கோவிந்தா... (எங்கேயும் எப்போதும்), முன் அந்திச் சாரல் நீ... (7 ஆம் அறிவு), ஆரிரரோ... , விழிகளில் ஒரு வானவில்... (தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்... (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே... (குள்ளநரிக் கூட்டம்) போன்றவை.

அதேபோல அதிக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவரும் முத்துக்குமார்தான்.

2012-ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார் முத்துக்குமார். பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரவான், தாண்டவம் என முக்கிய படங்களில் அவர்தான் பாடலாசிரியர். மொத்தம் 58 படங்கள் இப்போது கைவசம் உள்ளன.

கொலவெறியோடு புறப்பட்டிருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அழகான தமிழ் வார்த்தைகளுடன் அர்த்தமுள்ள பாடல்களைத் தரும் முத்துக்குமாரின் பயணம் தொடரட்டும்!


விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. கிண்டல்


நான் பதவிக்கு வந்தால் ஆறு மாதங்களில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக்குவேன், தமிழகத்தை என்றாரே ஜெயலலிதா. நின்றுவிட்டதா மின்வெட்டு?, என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்

தமிழகத்தில் பற்றி எரியும் மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, 'அணை - உலை - விலை விளக்கப் பொதுக்கூட்டம்எனத் தலைப்பில் சமீபத்தில் அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடத்தியது திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

இந்தக் கூட்டத்தில் சுப வீரபாண்டியன் பேசியதாவது:

''தலைப்பைப் பார்த்துவிட்டு 'இது என்ன விடுகதையா?’ என்று கேட்கிறார்கள். 'இல்லை.... இந்த நாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய கதை’. பெரியாறு அணையிலே இருக்கிற நீர் நமக்கு வேண்டும் என்று கேட்கிறோம். தர மறுக்கிறார்கள். கூடங்குளத்திலே அணு உலை வேண்டாம் என்கிறோம். தந்தே தீருவோம் என்கிறார்கள்.

'சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டதால், பெரியாறு அணை பலவீனமானதுஎன்று, அதை இடிப்பதற்கு காரணம் சொல்கிறார்கள். சிமென்ட் காரையை விடவும் சுண்ணாம்புக் காரை பலவீனமானதுதான். ஆனால், ஒரு உண்மை என்ன தெரியுமா? நாள் ஆக ஆக சிமென்ட் இளகும்; சுண்ணாம்பு இறுகும்.

பொருந்த பொய் சொல்லுங்கப்பா...

'பூகம்பம் வந்தால் பெரியாறு அணை உடைந்துவிடும். எனவே, பக்கத்திலேயே இன்னொரு அணை கட்டப் போகிறோம்என்றும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பூகம்பம் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வராதா? நான்கூட இதுகாலம்வரை கேரளச் சகோதரர்களை புத்திசாலிகள் என்றல்லவா நினைத்திருந்தேன். சொல்லுகிற பொய்யைக்கூட பொருந்தச் சொல்லத் தெரியவில்லையே!

மின்சாரத்தை பிரித்துத்தரும் மத்திய அரசு நீரை பிரித்துத் தர மறுப்பதேன்?

நெய்வேலியில் உற்பத்தி ஆகிற மின்சாரத்தை இன்றைக்கும் கர்நாடகா, கேரளாவுக்குப் பிரித்துக் கொடுக்கிறது மத்திய அரசு. மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றால், நீரைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை இல்லையா? இல்லை என்றால், நீ விலகிக் கொள். எங்கள் உரிமையை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.

இந்தியாவின் மின்சாரத் தேவையில், வெறும் 2.7 சதவிகிதம் மட்டுமே அணு உலையில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், அதற்காக செலவழிக்கப்படும் தொகையோ மிகஅதிகம். அணு உலையால் வரும் ஆபத்துக்களோ அதை விடவும் அதிகம். ஆனால், 'கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பனது. 6.5 ரிக்டர் வரை பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாதுஎன்கிறார்கள். அப்படி என்றால் '6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால், மக்கள் அழிந்து விடுவார்கள்என்றுதானே அர்த்தம்.

அணுக் கழிவுகளை நாடாளுமன்றத்தில் வைக்கலாமா?

மத்திய அமைச்சர் நாராயணசாமியும் 'அது ரொம்பவும் பாதுகாப்பானதுஎன்கிறார். அவ்வளவு பாதுகாப்பானது என்றால், இந்த அணு உலைக் கழிவுகளை எல்லாம் ஒரு பீப்பாயில் அடைத்து நாடாளுமன்றத்தின் நடுக்கூடத்தில் வைத்து விடலாமா? உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே... அணு உலை பாதுகாப்பானது அல்ல.

இதைத் தொடங்கிய ரஷ்யாவிலேயே இன்று அணு உலை கிடையாது. ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. தொழில் நுட்பம் மிகுந்த ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிர் வீச்சின் பாதிப்பு இன்னும் பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்கிறார்கள். ஜப்பானை விடவா நமக்குத் தொழில் நுட்பம் தெரியும்?

மறந்து போன விலையேற்றம்

அணையிலும் உலையிலும் இந்த விலை ஏற்றத்தை கொஞ்சம் மறந்துபோய் விட்டார்கள் நம் மக்கள். செம்மொழி நூலகம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் ஆகியவற்றை எல்லாம் இந்த அம்மையார் இழுத்து மூடியபோதும் தமிழனுக்குக் கோபம் வரவில்லை.

13,000 மக்கள் நலப்பணியாளர்களை தெருவில் நிறுத்திய போதும்கூட 'அது அவர்களது பிரச்னைஎன்றுதானே இருந்தான். எப்போது அவனுக்கு கோபம் வந்தது? காலையில் எழுந்து பால் வாங்கும்போதுதானே கை சுட்டது. பேருந்திலே ஏறி உட்காரும்போதுதானே இருக்கை சுட்டது. வாக்களித்த மக்களுக்கு விலையேற்றம், வரிச்சுமை, மின்வெட்டைத் தந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், வாக்களிக்காத யானைகளுக்கு குதூகலம், கொண்டாட்டம், புத்துணர்வைத் தந்திருக்கிறது.

ஆறு மாதங்களாகிவிட்டதே...

'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்என்றாரே அம்மையார். ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில் தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?

'இந்த ஆட்சி மோசமான ஆட்சிஎன்று விஜயகாந்தே சொல்கிறார். இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டதுஎன்றல்லவா பொருள்!

கூடிக்கலந்து முடிவெடுக்கும் ஜனநாயகம் எல்லாம் அம்மையாருக்குத் தெரியாது. மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றாலும் சசிகலாவை வெளியேற்றுவது என்றாலும் ஒரே நொடிக்குள் முடிவெடுப்பதுதான் அவரது ஜனநாயகம்.

சண்டையா சண்டைக்காட்சியா...

அவர்களுக்குள் உண்மையான சண்டையா? அல்லது சண்டைக் காட்சியா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர்களது உட்கட்சிப் பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சசிகலாவை வெளியேற்றிவிட்டு போயஸ் தோட்டத்துக்குள் சோ வந்திருக்கிறாரே. அது கட்சிப் பிரச்னை அல்ல; இனப் பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!''

இவ்வாறு சுபவீ பேசினார்.