முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து கடந்த 29ந்தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
எனக்கு சொந்தமான 2 1/2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார். எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 1/2 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.
என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார். என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment