சென்னையில் பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் பல் டாக்டராக பணிபுரிபவர் ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக பணிபுரிகிறேன். எனது தாயார், மகப்பேறு டாக்டராக உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு என்னிடம் ஆறுமுகம் சுப்பிரமணியம் என்ற என்ஜினீயர் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது எனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் போனில் மருத்துவ ஆலோசனை கேட்பதற்கு எனது செல்போன் நம்பரை கொடுத்தேன்.
மேலும் எனது இ-மெயில் முகவரியையும் கொடுத்தேன். இதை வைத்து அந்த என்ஜினீயர் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் எனக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது மனைவியும், குழந்தையும் சென்னையில் வசிக்கிறார்கள். நான் அவருக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை.
என்னை காதலிப்பதாகவும், என்னை 2-வது திருமணம் செய்து கொள்வதாகவும் தொல்லை கொடுத்தார். ஆன்லைன் மூலம் எனக்கு நகைகள், பூச்செண்டு போன்றவற்றை காதல் பரிசாக அனுப்பினார். அவற்றை நான் திருப்பி அனுப்பினேன். அவரது அன்பு தொல்லை பின்னர் காமத்தொல்லையாக மாறியது.
ஆபாச தகவல்களை செல்போன் மூலமும், இ-மெயில் மூலமும் அனுப்ப ஆரம்பித்தார். அவரது தொல்லை அத்துமீறிப்போகவே, நான் 2008-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தேன். கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார்.
அப்போதே அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி இருந்தால், இப்போது இந்த தொல்லை எனக்கு ஏற்பட்டிருக்காது. அவரது மனைவி மற்றும் குழந்தை நலன் கருதி, அவரை ஜெயிலுக்கு அனுப்பவில்லை. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் இரக்கப்பட்டு அவரை மன்னித்து, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.
ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் தனது `செக்ஸ்' சேட்டைகளை தொடங்கிவிட்டார். தினமும் எனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி எனது நிம்மதியை கெடுத்து வருகிறார். எனது தாயாருக்கும் தகவல் அனுப்பி தொல்லை கொடுக்கிறார். என்னை அவரது மனைவி போல பாவித்து தகவல் அனுப்புகிறார்.
இதுபோல் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது எனக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. திருமணமாகாத என்னை, அவரது தகவலை பார்த்து, எனது குடும்ப நண்பர்களும், உறவினர்களும், எனக்கு எப்போது திருமணம் நடந்தது என்று கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்லி என்னால் சமாளிக்க முடியவில்லை. மேலும் நான் அவருக்கு பல் சிகிச்சை அளித்தபோது, அவருக்கு முத்தம் கொடுத்து, நான்தான் அவரை காதலித்ததாகவும் தகவல் அனுப்பி கேவலப்படுத்தி விட்டார். அவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரது `செக்ஸ்' தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீசுக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் குழலி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. புகார் கூறப்பட்டுள்ள என்ஜினீயர் ஆறுமுகம் சுப்பிரமணியம், அமெரிக்காவில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு அவர் விமானத்தில் சென்னை வந்தார். அமெரிக்காவில் இருந்தபடியே செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் தொல்லை கொடுத்து வந்த அவரை சென்னை வரும்போது பொறி வைத்து பிடிக்க பெண் போலீஸ் தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு விமானத்தில் வந்து இறங்கியபோது, ஆறுமுகம் சுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வடபழனி போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் எனது சொந்த ஊராகும். நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். பிரபல தனியார் நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் மாதம் ரூ.1.75 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தேன். எனது மனைவியும் எம்.சி.ஏ. பட்டதாரிதான். செல்போனில் இளம்பெண்களிடம் செக்ஸ் விளையாட்டு விளையாடுவது எனது பொழுது போக்கு ஆகும்.
நான் 7 தடவை சிகிச்சைக்காக, டாக்டர் ருக்மணியை சந்தித்தேன். அப்போது அவர்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன். அவர் எனது காதலை ஏற்கவில்லை. ஒரு முறை எனது தவறையும் அவர் மன்னித்தார். மீண்டும் நான் அவருக்கு தொல்லை கொடுத்தது எனது தவறுதான். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
என்ஜினீயர் ஆறுமுகம் பிரபல சினிமா பின்னணி பாடகி ஒருவருக்கும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பின்னணி பாடகி போலீசில் புகார் கொடுக்கவில்லை. அவரை தனது ரசிகராக பார்ப்பதாக அந்த பாடகி போலீசாரிடம் கூறிவிட்டாராம். கைதான என்ஜினீயர் ஆறுமுகம் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த முறை நான் மன்னிப்பு கொடுக்கமாட்டேன் என்று புகார் கொடுத்த பெண் டாக்டர் போலீசாரிடம் கூறிவிட்டார். இது ஆறுமுகத்துக்கு மட்டுமல்ல, இதுபோன்ற குற்றங்கள் புரிபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அந்த டாக்டர் தெரிவித்துவிட்டார்.கைதான என்ஜினீயரின் மனைவியும் நேற்று போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்.
அவர் தனது குழந்தைக்காக, கணவர் செய்த தவறுகளை மன்னித்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். என்ஜினீயர் ஆறுமுகம் நல்ல கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் நல்லநிலையில் உள்ளனர். தனது தவறான நடத்தை மூலம் என்ஜினீயர் ஆறுமுகம் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்பதாக அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்து காணப்படுவதாகவும் போலீசார் கூறினார்கள்.
No comments:
Post a Comment