மும்பையில் உண்ணாவிரதமிருக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு வாடகை செலுத்த தேவையான தொகையை நன்கொடையாக தருமாறு மக்களைக் கேட்டுள்ளார் அன்னா ஹஸாரே.
ஊழலுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தை ஹஸாரே ஏற்காமல் அடம்பிடித்து 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்பு அவர் உண்ணாவிரதமிருந்தபோது ஆதரித்தவர்கள் கூட, இந்த முறை எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
இருந்தாலும் மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த மைதானத்துக்கான வாடகையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்தும் கடுமையாகத் திட்டி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். உண்ணாவிரதம் என்ற பெயரில் மக்களுக்கு அவர் தொல்லை கொடுப்பதாகவும், நாடாளுமன்றத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் குட்டு வைத்தனர்.
ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை ஹஸாரே. மைதானத்துக்கான வாடகையை நன்கொடை மூலமாக வசூலித்து கொடுப்பதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித்தார்.
தெரியாமல் வழக்கு போட்டுவிட்டார்கள்!
இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கான வாடகையை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்தவர்கள், புதியவர்கள். தவறான முடிவை எடுத்து விட்டனர். என்னிடம் கேட்டிருந்தால் நீதிமன்றத்துக்குச் செல்வதை அனுமதித்திருக்க மாட்டேன். ஆசாத் மைதானம் போதுமானதாக இருக்காது என்பதால் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தை அணுகி வாடகையை குறைக்குமாறு கேட்டோம். அதற்கு, அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருந்தால் வாடகையை குறைக்கலாம் என எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதான நிர்வாகம் தெரிவித்தது.
எனவே, சில சலுகைகளுக்கு பிறகு மைதானத்தின் வாடகை ரூ.7 லட்சம் வரை ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே, ரூ.2 லட்சம் வரை மக்கள் நன்கொடை அளித்துள்ளனர். மேலும், நன்கொடை வசூல் செய்து மைதான வாடகையை கொடுப்போம். காசோலை அல்லது வரைவோலை மூலமாக மட்டுமே நன்கொடையை ஏற்போம். நன்கொடை பற்றிய கணக்குகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
கிரண்பெடி, கெஜ்ரிவால்
வலிமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி, மும்பையில் நான் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்தில் என்னுடன் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பெடி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதுபோல, டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மற்றொரு சமூக ஆர்வலர்கள் குழுவினர் கலந்து கொள்வார்கள்.
வலுவான லோக்பால் சட்டத்தை பல்வேறு அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. இந்திய மக்களின் முழு சம்மதத்துடன் மட்டுமே புதிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும். லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ. அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.
மும்பைக்கு இடமாற்றம் ஏன்?
இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு 27-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கூடுதலாக சில நாட்களுக்கு இந்த அனுமதி நீட்டிக்கப்படும். இந்த தகவலை, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், 'டெல்லியில் கடுங்குளிர் நிலவுவதால் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு அது சரியான இடமாக இருக்காது. இரவு முழுவதும் மைதானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். எனவே, அவருடைய வயது மற்றும் குளிரை கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்துள்ளோம். அவருடன் ஏராளமான மக்களும் அந்த குளிருக்குள் உண்ணாவிரதம் இருப்பார்கள். இதுவும், இட மாற்றத்துக்கான காரணம் ஆகும்' என்றார்.
No comments:
Post a Comment