தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிப் பெற்ற பின்னர் கடந்த ஜூன் மாதம் கடைசியில் அத்தொகுதிக்கு சென்று, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பிறகு 5 மாதம் கழித்து நேற்று தான் ரிஷிவந்தியம் சென்றார்.
அங்கு தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினார்.
பகண்டை கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்த அவர், ஒன்றிய கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
விஜயகாந்த்தை பார்க்க தொண்டர்கள், பொதுமக்கள் கூட்ட அரங்கை சுற்றி திரண்டதையடுத்து அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.
தனது தொகுதியில் நடைபெறும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு துறைவாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர்.
இக் கூட்டத்தில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, திருக்கோவிலூர் தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன், திருக்கோவிலூர் உதவி கலெக்டர் ஆனந்த், கள்ளக்குறிச்சி உதவி கலெக்டர் உமாபதி, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைத் துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 58 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து முசுகுந்தா ஆற்றின் குறுக்கே உள்ள பிரம்ம குண்டம்- ராவத்தநல்லூர், வடபொன்பரப்பி - அருளம்பாடி, ஆற்கவாடி- அரும்பராம்பட்டு ஆகிய இடங்களை பார்வையிட்ட விஜய்காந்த், இங்கு பாலங்கள் கட்டுவது தொடர்பாக திட்ட மதிப்பீட்டை தயாரித்து அளிக்குமாறு அதிகாரிகளிடம் கோரினார்.
மணலூர்பேட்டையில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம் கட்டும் இடத்தையும் விஜயகாந்த் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றதும் நன்றி சொல்ல ரிஷிவந்தியம் வந்த நான், பல மாதங்களாக தொகுதி பக்கம் வரவில்லை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் பல வேலைகள். இதனால் வர இயலவில்லை. மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை இப்பவே கூற இயலாது. நான் மூச்சு விட நேரம் தேவை.
இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்வேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது நிலைமை என்னாச்சு?. பால் விலை, பஸ், மின் கட்டணம் உயர்த்தினார்களே. இதை யார் கேள்வி கேட்பது.
கொடநாடு போகிறேன் என்று சொல்லிவிட்டு போகாமல் பயணத்தை ரத்து செய்த ஜெயலலிதாவிடம் ஏன் போகவில்லை என்று கேள்வி கேட்க முடியுமா என்றார் விஜய்காந்த்.
No comments:
Post a Comment