பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி எதுவும் நடக்கவில்லை என, ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி கூறியுள்ளார். இந்நிலையில், சீன அரசின் உயர் அதிகாரி டாய் பிங்கூவோ, இஸ்லாமாபாத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தானில், அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது. பிரதமர் யூசுப் ரசா கிலானி அளித்த பேட்டியில், பாக்., மக்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சி நடப்பதாகவும், அது வெற்றி பெறாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராணுவப் புரட்சி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வதந்திகள் பரவின. இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், நேற்று ராணுவத் தளபதி கயானி சார்பில், ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவப் புரட்சி எதுவும் நடக்கவில்லை. உண்மையான பிரச்னைகளைத் திசை திருப்ப இந்த வதந்திகள் பரப்பப்படுகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீன அரசின் உயர் அதிகாரியும், அரசியல் நிபுணருமான டாய்பிங்கூவோ, இஸ்லாமாபாத்திற்குச் சென்றார். இந்தப் பயணம் குறித்து, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லியு வெய்மின் கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள முக்கியமான பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, பிங்கூவோ பாக்., சென்றுள்ளதாகத் தெரிவித்தார். நேட்டோ தாக்குதல் விவகாரத்தால், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சீர் குலையத் துவங்கிய நிலையில், முதன் முதலாக
ஒரு சீன உயர் அதிகாரி, இஸ்லாமாபாத்திற்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாக்., சுப்ரீம் கோர்ட்டில் நடந்த
மெமோகேட் விசாரணையில், கயானியும், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷாவும் தங்கள் பதிலறிக்கைகளைத் தாக்கல் செய்தனர்.
இவற்றுக்குப் பதிலளித்த தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி, "இவ்விவகாரத்தில், கோர்ட் உண்மையைக் கண்டறியும். மேலும், ராணுவம் தலையிடாமல் நீதித்துறை தடுக்கும். அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காக தான், நீதிபதிகள் இருக்கிறோம்' என்றார்.
No comments:
Post a Comment