அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் விமானத்தை கைப்பற்றியிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் கைப்பற்றப்பட்டதாகவும், தற்போது அது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்து அரபி மொழி டிவி சேனலான அல் ஆலம் கூறுகையில், ஈரானின் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்த விமானம் பிடிபட்டது. விமானத்தை ராணுவத்தினர் கைப்பற்றியபோது அதில் லேசான சேதம் ஏற்பட்டது. விமானம் தற்போது ஈரான் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.
ஈரான் எல்லைக்குள், சட்டவிரோதமாக ஊடுறுவியதால் இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க ட்ரோன் விமானம் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் வரவில்லை என்றும், அதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேற்கு ஆப்கானிஸ்தான் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விமானம் மாய்மானது. அதைத்தான் ஈரான் ராணுவம் பிடித்திருக்கலாம் என்று அமெரிக்க் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அந்த விமானம் கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து இயக்கி வந்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அது ஈரான் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.
முதலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் கூறின. இருப்பினும் ஈரான் ராணுவத்திற்கு நெருக்கமான பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், விமானத்தை ஈரான் ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டனர். விமானத்தில் லேசான சேதமே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
ட்ரோன் என்பது ஆளில்லாத, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கக் கூடிய சிறிய வகை தாக்குதல் விமானமாகும். இத்தகைய விமானங்களைக் கொண்டுதான் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment