விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை சமாதான நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டவே விடுதலைப்புலிகள் முயற்சி செய்கின்றனர் என்று இலங்கை அமைச்சர் மிலிந்தா மொரகொடா தெரிவித்ததாக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்க தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் ஆண்டன் பாலசிங்கம். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளின் ஆலோசகராகவும், பிரபாகரனின் வலதுகரமாகவும் விளங்கினார்.
இலங்கை இனப் பிரச்சனையில் நடந்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் புலிகளின்சார்பில் பங்கேற்றவர் ஆண்டன். 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த முதல் பேச்சுவார்த்தையில் தொடங்கி கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடந்த அமைதிப்பேச்சவார்த்தை வரை அனைத்திலும் பாலசிங்கம் கலந்து கொண்டார். 22-12-2006 அன்று புற்றுநோயால் பாலசிங்கம் லண்டனில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த ஆஸ்லிவில்ஸ் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில் அவர் கூறியிருப்பதாக விக்கலீக்ஸ் தெரிவித்துள்ளதாவது,
சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆண்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்தா மொரகொடா தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment