2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தொலைத்தொடப்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோர்தான் முக்கியமான குற்றவாளிகள் என்று சிபிஐ கூறியுள்ளது.
இதனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட மற்ற 10 பேரைப் போல இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சிபிஐ கூறியது.
இருப்பினும் இன்று சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி, முன்னாள் தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் சந்தோலியா, சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கனிமொழி, சரத்குமார் உள்பட 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோர் மட்டும் இன்னும் சிறையில் உள்ளனர். இவர்களில் ராசா ஜாமீன் மனுவே தாக்கல் செய்யவில்லை.
சித்தார்த் பெகுரா கனிமொழியுடன் சேர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 28ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பெகுராவுக்கு மட்டும் ஜாமீன் கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந் நிலையில் சந்தோலியா டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஓ.பி. சைனி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோர்தான் பிரதான எதிரிகள். மிகப்பெரிய முறைகேடு நடப்பதற்கு திட்டமிட்டதில் இவர்கள் 3 பேருக்கும்தான் முக்கிய பங்கு உண்டு.
எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் இவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் மாறுபட்டவைது. எனவே ஜாமீனில் விடுதலையானவர்களுடன் இவர்களை ஒப்பிடவே முடியாது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான தேதியை சந்தோலியாதான் மாற்றியுள்ளார். இதனால் தனியார் நிறுவனங்கள் பயனடைந்தன என்றார்.
சந்தோலியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், இந்த வழக்கில் இரு வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தோலியா அரசு ஊழியர் என்பதால் அவருக்கு ஜாமீன் மறுப்பது சரியானதல்ல. இந்த வழக்கில் ஆதாயம் அடைந்தவர்கள் ஜாமீன் பெற்று வெளியே இருக்கும்போது கடந்த 10 மாதமாக சந்தோலியா சிறையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே சிபிஐ பாரபட்சம் காட்டுவது ஏன்?. அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கே ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தோலியா மட்டும் சிறையில் இருக்கிறார் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஜாமீன் பெறும் முதல் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த வழக்கில் இப்போது ராசா, பெகுரா மட்டுமே சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment