சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மாவட்ட தலைவர்கள் பி.தேவராஜ், சவுந்தர்ராஜன் என்ற ராஜா, வியாசை மணி, கருணாநிதி, மணலி சண்முகம், மாநில இணை செயலாளர் சி.எல்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் த.வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:-
சில்லரை வணிகத்தில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்தது தேச துரோகமாகும். இதனால் சிறு வியாபாரிகள், சிறு தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தொழில் சுதந்திரத்தை இழந்து விடுவார்கள். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் அவர்களை விரட்டி அடிக்கும் வரை ஓய மாட்டோம்.
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கத்தில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் நாட்டில் நுழைந்தபோது விலை குறைத்து விற்பனை செய்து இங்குள்ள சிறு குளிர்பான நிறுவனங்களை ஒழித்து விட்டனர். பிறகு தன் இஷ்டம் போல விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
இதேபோல்தான் அன்னிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து இங்குள்ள சிறு வணிகர்களை ஒழித்து விடும் அபாயம் உள்ளது. அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் இங்கு ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அவர்கள் விலையை உயர்த்தி விற்றாலும் யாரும் தட்டிக்கேட்க முடியாது. எனவே அன்னிய நிறுவனமான “வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் தடுப்போம். மீறி கடைகளை அமைத்தால் தீவைத்து எரிப்போம்.
கடந்த நூற்றாண்டில் வணிகம் மூலம்தான் இங்கிலாந்து நாடு இந்தியாவை அடிமைப்படுத்தியது. அவர்களிடம் நமது முன்னோர் கடுமையாக எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். தற்போது மீண்டும் வணிகம் மூலமே அன்னிய சக்திகள் நம்மை ஆக்கிரமிக்க படையெடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இரண்டாம் கட்ட சுதந்திர போராட்டத்திற்கு வணிகர்களாகிய நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்திற்குள் ஒருபோதும் வெளிநாட்டு கடைகளை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசின் தவறான கொள்கையாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதை உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.
போராட்டத்தில் டைமன்ட் ராஜா வெள்ளையன், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், பிரபாகரன், செய்யது முகமது, டி.ஜி. குமார், பூம்புகார் நகர் வட்டார வணிகர் சங்க தலைவர் சிவமுருகன், டில்லிபாபு, தியாகராஜன், எஸ்.எம்.தமிழ்செல்வன், ஜோதிராம், மீனம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, ஆர்.எம்.செல்வம், சபாபதி, செல்லத்துரை, மூலக்கடை ராமநாதன், மதன்குமார், பிரேமன், தையல் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment