கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, 2ஜி அலைவரிசை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர். கனிமொழிக்கு 28-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது என்றாலும் கோர்ட்டு உத்தரவு மற்றும் ஆவணங்கள் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 29-ந்தேதி இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்ப முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என் மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன், இந்த வழக்கில் பலரும் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மதியம் 1.45 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். ராஜாத்தி அம்மாளும் உடன் சென்றார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளுஅம்மாள், செல்வி, மு.க. தமிழரசு, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, ஐ.பெரியசாமி, மைதீன்கான், சுப.தங்கவேலன், பூங்கோதை, தமிழரசி, சற்குணபாண்டியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு மற்றும் செ. குப்புசாமி, எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயதுரை மற்றும் எப்.எம்.ராஜரத்தினம், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழியை வரவேற்க தி.மு.க. கொடியுடன் விமான நிலையத்தில் குவிந்தனர்.
கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன.
மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இனமான எழுச்சியே வருக, இரும்பு கூண்டின் பூட்டு திறந்தது.. பாட்டுக்குயிலே... கனிமொழியே வருக, சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக, ஆறுதல் கூற வந்தவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறி அனுப்பிய கனிமொழியே வருக, சோதனை பொறுத்தாய்.. தண்டனை பொறுத்தாய்... பொறுத்தார் பூமி ஆள்வார், இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு? என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
எங்கே போகிறது தமிழகமும் தமிழர்களும்.நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் குறிப்பிடுவது போல் அடிவாங்கி அடிவாங்கி மறத்தமிழனுக்கு மரத்துப் போச்சிது.விடிவே இல்லையா?நல்ல தலைப்பு ஊழல்ராணி.மக்கள் சிந்திக்க வேண்டும்.
ReplyDelete