தனது காந்த விழிகளால் ரசிகர்களை சுண்டி இழுத்து தமிழ்நாட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஒருநாள், தூக்கு கயிற்றுக்கு தன்னை இரையாக்கிக்கொண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் "தி டர்ட்டி பிக்சர் படம் தயாராகியுள்ளது.
சில்க்ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி டெலி பிலிம்ஸ் தயாரிக்க, மிலன் இயக்கியுள்ளார். டிசம்பர் - 2ம் தேதி படம் வெளியாகிவுள்ளது. ஏற்கெனவே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், படத்தில் இணைக்கப்பட்டுள்ள "நாக்க முக்க... பாடல், படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை கொடுத்து வருகிறது.
"காதலில் விழுந்தேன் படத்திற்காக விஜய் ஆண்டனி மெட்டமைத்திருந்த "நாக்க முக்க... பாடல் இரண்டு வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இப்பாடல், ஸ்டேடியத்தில் ஒலிபரப்பப்பட்டது. தவிர லீக் போட்டியின்போது இந்த பாடலுக்கு ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற கேன்ஸ் கோல்டு மற்றும் இரண்டு ஏசியன் ஸ்பைக் போன்ற சர்வதேச அளவிலான விருதுகளை "நாக்க முக்க பாடல் பெற்றுள்ளது. கேன்ஸ் கோல்டு விருது வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் ஆண்டனி பெற்றார். ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு உலக மேடைகளிலும் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடக வசதிகள் பிரபலமடையாத 2008-ம் ஆண்டிலேயே சர்வதேச அளவில் இசைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்து "நாக்க முக்க பாடல் பிரபலமானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
அந்த சூழ்நிலையிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாக்கமுக்க பாடல், ஒருவேளை இப்போது வெளிவந்திருந்தால் அதைவிட பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் வாய்ப்பு இருப்பதால் கருத்து சொல்லும் இசை விமர்சகர்கள், இன்றைக்கு அந்த பாடல் பேஸ்புக்கில் வந்திருந்தால் 10 லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதுவே "தி தர்ட்டி பிக்சர் படத்தில் இந்த பாடலை இணைக்க காரணமாக அமைந்தது. தமிழில் புகழ்பெற்ற நடிகையின் கதையை மையமாக கொண்ட படம் என்பதால் பிரபலமான தமிழ்பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்த இயக்குனரும், தயாரிப்பாளரும் இதற்கான தேடலில் இறங்கியபோது பலராலும் பரிந்துரைக்கப்பட்ட யோசனைதான் "நாக்க முக்க பாடல்.
இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் அந்த பாடலை வாங்குவதில் உறுதியாக இருந்தவர்கள், இரண்டு மாத காலங்கள் தொடர் முயற்சிகளுக்கு பிறகு விஜய் ஆண்டனியின் சம்மதத்தை பெற்றுள்ளனர். நாக்க முக்க பாடல் இப்போது "தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம். படத்தில் புரமோஷனுக்கு இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த படக்குழுவினர், இனி பாலிவுட்டிலும் "நாக்க முக்க... பாடல் பட்டையை கிளப்பும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment