தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தற்போது இரவுக் காட்சிப்பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டதாகவும், மேலும் இரவுக் காட்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதியும், திரையரங்குகளில் இரவுக்காட்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அபிராமி திரையரங்கத்தின் உரிமையாளர் அபிராமி ராமநாதன், தெரிவித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்த தகவலை மறுத்திருக்கும் தமிழ்நாடு எக்ஸிபிட்டர்ஸ் சங்கத்தினர், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போது காலை 10 மணியிலிருந்து இரவு 1 மணிக்குள் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று நமது சங்கம் தமிழக அரசை கோரி வருகின்றது. இதன் மூலம் ஒரே நாளில் ஒரே திரையரங்குகளில் இரண்டு படங்களை திரையிட்டு ரிலீசாகாமல் தேங்கிக் கிடக்கும் பல சிறிய திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நமது சங்கம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நமது சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட அபிராமி ராமநாதன், தமிழகத்தில் இரவுக் காட்சிகல் ரத்து என்ற தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி ஒரு தேவையில்லாத அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.
அவருடைய அபிராமி திரையரங்கில் கூட்டம் குறைந்து விட்டபடியாலும், நமது சங்கத்திலிருந்து அவரை நீக்கி விட்டதாலும் நமது உறுப்பினர்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தே ஆக வேண்டும் என்று ஒரு தவறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் தங்கத் தாரகை மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்கள் கவனத்தை திசைத் திருப்பி இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் கடந்த ஆட்சிக்கு தன்னுடைய விசுவாசத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார். ஐ.டி. செக்டாரில் பணிபுரியும் பல பெண்கள் நள்ளிரவில் கூட நல்ல பாதுகாப்போடுதான் சென்று வருகின்றார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
தமிழகத்தில் எந்த திரையரங்குகளில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ராமநாதன் அவர்கள் உடனே விளக்க வேண்டும். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை ஒரே நாளில் 362 ரவுடிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் நாடே அறியும்.
எனவே அவருடைய அறிக்கை முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்டது. மக்களை திசைத் திருப்புவது அரசுக்கு எதிரானது என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் இரவுக் காட்சிகள் வழக்கம் போல செயல்படும் என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment