ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனைவரும் விடுதலையாகி விட்ட நிலையில் ஆ.ராசா மட்டும் ஜெயிலில் தனிமையில் தவிக்கிறார். அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார், ஷாகித்பல்வா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் தனி உதவியாளர் சந்தோலியா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆ.ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அடுத்து கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மே 20-ந்தேதி கைதானார்கள். பல மாதங்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய முதலில் சி.பி.ஐ. கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் மறுத்து விட்டது.
இந்த நிலையில் கனிமொழி உள்பட 5 பேருக்கு ஜாமீன் அளிப்பதை எதிர்க்க மாட்டோம் என்று சி.பி.ஐ. முடிவு எடுத்தது. மற்றவர்களது ஜாமீனை சி.பி.ஐ. எதிர்த்தது. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனியார் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர்கள் 5 பேரும் முதல் முறையாக விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்து கனிமொழி எம்.பி. சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. தொடர்ந்து ஷாகீத் பல்வா, ஆர்.கே. சந்தோலியா ஆகியோருக்கும் அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்தது. கடைசியாக தற்போது ஆ.ராசா, சித்தார்த் பெகுராவும் மட்டுமே சிறையில் இருக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான பிரபலங்கள் முன்பு சிறையில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது உண்டு. பிரபலங்கள் என்பதால் ஜெயிலில் அவர்களுக்கு ஏ வகுப்பு கிடைத்தது. இதன் மூலம் சலுகைகள் அனுபவித்தனர். அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் திகார் சிறையில் பிரபலங்கள் இருந்த அறை வெறிச்சோடி கிடக்கிறது. ஆ.ராசா தனிமையில் தவிக்கிறார். அவருடன் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் கைதான ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே. சர்மா அடைக்கப்பட்டு இருந்தார்.
கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டதால் ஆர்.கே. சர்மாவும் திகார் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். முன்பு சிறையில் இருந்தாலும் ஆ.ராசா எப்போதும் புன் சிரிப்புடன் காணப்படுவார். மற்ற கைதிகளுடன் சகஜமாக பழகுவார். பத்திரிகைகள் படிப்பார், எழுதுவார். தற்போது தனிமை அவரை மிகவும் வாட்டுகிறது. முன்பு இருந்த புன் சிரிப்பு இல்லை. கனத்த இதயத்துடன் ஜெயில் அதிகாரிகளுடன் பேசுகிறார். அவரது முகத்தில் வேதனையும், வருத்தமும் தோய்ந்து இருப்பதாக ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடைசியாக ராசாவுடன் சிறையில் இருந்த போலீஸ் அதிகாரி ஆர்.கே.சர்மா சிறந்த இந்தி பண்டிட் ஆவார். அவரிடம் இருந்து ராசா இந்தி கற்று வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஸ்பெக்ட்ரம் பிரபலங்கள் விடுதலையான பிறகு ஆர்.கே. சர்மாவும் விடுதலையானதால் ராசா சோகத்துடன் காணப்படுகிறார். தேவைப்பட்டால் மட்டுமே பேசுகிறார்.
இதற்கிடையே ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே. சந்தோலியாவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சந்தோலியாவின் ஜாமீன் மனு விசாரணையின் போது ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோர் தான் பிரதான எதிரிகள் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.
பொது ஊழியர்கள் இது போன்ற முறைகேட்டில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது என்றும் சி.பி.ஐ. குறிப்பிட்டு இருந்தது. ஆனால் திடீர் என்று சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கியது ஏன் என்று சில பத்திரிகைகள் கேள்வி விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு நீதிபதி வி.கே. ஷாலிதாமே முன் வந்து மனுவாக எடுத்துக் கொண்டு சந்தோலியாவின் ஜாமீனுக்கு தடை விதித்தார். 7-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அன்றுதான் சந்தோலியாவுக்கு ஜாமீன, உண்டா? இல்லையா, என்பது உறுதி செய்யப்படும். ஆனால் சந்தோலியா நேற்று முன்தினமே வீடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment