சரத்பவார் பற்றிய தனது கருத்துக்கு அன்னா ஹசாரே விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி சரத் பவாரை, பத்திரிகையாளர் போர்வையில் வந்த ஹர்பிந் தர்சிங் என்ற இளைஞர் தாக்கினார். கன்னத்தில் அவர் ஓங்கி விட்ட அறையில் சரத்பவார் நிலை குலைந்து போனார்.
இச் சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சரத்பவார் தாக்கப்பட்டது பற்றி, ரலேகான் சித்தி கிராமத்தில் தனது வீட்டில் இருந்த ஊழல் எதிர்ப்பு வாதி அன்னா ஹசாரேயிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதைக் கேட்ட அவர், என்ன... சரத்பவார் தாக்கப்பட்டாரா? ஒரே ஒரு அடிதானா? என்று கேட்டார். இப்படி அவர் கேட்டது வன்முறையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. பின்னர், மாலையில் புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்து இதற்கு அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
சரத்பவார் தாக்கப்பட்டதாக சிலர் வந்து என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், அவரை அடிக்க மட்டுமே செய்தார்களா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்று தான் அவர்களிடம் கேட்டேன். சரத்பவார் மீது இருந்த அக்கறை காரணமாக எனது கவலையை தெரிவித்தேன். மற்றபடி உள்நோக்கம் எதுவும் கிடையாது.
இளைஞர்களின் கோபத்தை நான் உணர்கிறேன். ஊழலும் பணவீக்கமும் அன்றாட வாழ்க்கையை கடினமாக்கி இருக்கின்றன. ஆனால் ஜனநாயகத்தில் வன் முறைக்கு இடம் கிடையாது. எவரையும் துன்புறுத்துமாறு, நமது அரசியல் அமைப்பு சட்டம் கூறவில்லை. இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு விரோதமான செயல்.
சரத்பவார் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை அவர் மீது விழுந்த அடியாக நான் பார்க்கவில்லை, ஜனநாயகத்தின் மீது விழுந்த அடியாகவே கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment