தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் இருந்து ' WHY THIS KOLAVERI DI ' பாடல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை மட்டும் முதலில் வெளியிட்டார்கள். அப்பாடல் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் அப்பாடல் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறியிருப்பது " ஒய் திஸ் கொலைவெறி என்னும் பாடல் அதிரி புதிரியான வெற்றி என்பதாக ஊடகங்கள் பிரபலப்படுத்தியதை அடுத்து அந்தப்பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்பாடல் எனக்கும் பிடித்துப்போயிற்று. தமிழை மட்டுமே கொலைசெய்துவந்த திரைப்பாடலில் முதல்முறையாக ஆங்கிலம் கொலைசெய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பாடல் என்னை வசீகரித்ததற்கான முதல் காரணம்.
நம்ம ஊர் ஆங்கில அறிவை இதைவிட எள்ளலாக நையாண்டியாகச் சொல்ல முடியாது. தனுஷிற்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாததால் துண்டு துக்கடாவாக அவர் ஆக்கியிருக்கும் வாக்கியயமைப்பில் ஆங்கிலம் சின்னாப்பின்னப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது. அவர் என்ன பாடுகிறார் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்தப்பாடலை யாரும் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள். ஒரு எளிய மனிதனை ஆங்கிலம் பேசுவோர் கேவலமாகப் பார்த்ததுபோக ஆங்கிலம் பேசுவோர் அத்தனைபேரையும் அப்பாடல் முடிந்த அளவு கேவலப்படுத்தியிருப்பது மற்றுமொரு சந்தோசம்.
பாடல் முழுக்க பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு அழகு படுத்திவிட்டு பொருத்தமில்லாத வரிகளை இட்டு நிரப்பியிருப்பதால் கேளிக்கைக்கு உகந்த பாடலாக 'கொலைவெறி' மாறியிருக்கிறது. தவிர, ஒரு பாடலின் தேவையை வியாபார உத்தியாக மாற்றிய விதத்தில் கொலைவெறி பாடல் தனி கவனம் கொள்ள வைக்கிறது.
யூ டியூபில் இத்தனை லட்சம்பேர் கேட்டதாக பெருமையோடு அறிவித்துக்கொள்ளும் அப்பட நிறுவனம் அத்தனைபேரும் '3' படத்தை பார்க்கத் தூண்டுகிறது. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் ஒரு இளம் கதாநாயகனுக்கு எதை கொலை செய்தாவது வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி வந்திருக்கிறதே அந்த வெறிக்காகவேணும் இப்பாடலை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.
2011ஆவது வருடத்து தமிழ் இளைஞன் ஒருவன் ஆங்கிலத்தை எத்தனை சிரமத்தோடு அணுகுகிறான் என்பதே பாடலின் ஊடாக சமூகவியலாளர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டியது.இப்படியான தமிங்லீஷ் பாடல்கள் தமிழைக் காப்பாற்றும். ஆங்கிலத்தை ஏமாற்றும். வாழ்த்தி வரவேற்போம் தனுஷையும் அவருடைய சகாக்களையும். " என்று தெரிவித்துள்ளார்.
சீனா ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் தாய் மொழியில் கல்வி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று அனைத்திலும் இருந்து வரும் நிலையில் நம் நாட்டில் அதுவும் நம் தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை. யாரும் கவலைப்படவும் இல்லை. நீங்களாவது முன் வந்து சொன்னீர்களே நன்றி.
ReplyDelete