வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
தமிழகம் பெரும் நிதிச் சுமையில் இருப்பதாகக் கூறிக் கொண்டு பால் விலை, பஸ் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தினார் முதல்வர் ஜெயலலிதா. அதே போல மின் கட்டணத்தையும் உயர்த்துமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஆணையத்தின் முக்கிய வேலை, மாநில அரசுகள் சொல்லும் பரிந்துரைப்படி மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது தான் (அதாவது உயர்த்துவது தான்). மாநில அரசுகள் மானியம் தந்துவிட்டால், மின் கட்டண உயர்வை இந்த ஆணையம் கட்டாயப்படுத்தாது.
இந் நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் ரூ. 41,000 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையே ரூ. 5,000 கோடியைத் தாண்டிவிட்டதாகவும் கூறி மின் கட்டண உயர்வுக்கு தயாராகி வருகிறது தமிழக அரசு.
மின் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 17ம் தேதி மனு கொடுத்தது. அதில் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்ற விவரத்தையும் தமிழக அரசின் மின் வாரியம் கொடுத்துள்ளது.
அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது ஒகு யூனிட் மின்சாரத்தை வினியோகிக்க மின் வாரியத்துக்கு ரூ. 5.31 செலவாகிறதாம். ஆனால், கட்டணம் ரூ.3.81 ஆக உள்ளது. இதனால் ஒரு யூனிட் மின்சாரம் மூலம் மின்வாரியத்துக்கு ஏற்படும் நஷ்டம் ரூ.1.50. இதை ஈடுகட்டும் வகையில் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கட்டண உயர்வு மூலம், மின்சார வாரியத்துக்கு ரூ. 8,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்குமாம்.
கட்டணத்தை உயர்த்தச் சொல்லும் தமிழக அரசின் பரிந்துரை மீது இன்று முதல் மின்சார ஒழுங்குமுறை ஆலோசனைகளை நடத்துகிறது. ஆணையத்திடம் மின் வாரியத்தின் தலைவர் ராஜிவ் ரஞ்சன் ஆஜராகி விளக்கம் சொல்வார்.
இந்த ஆலோசனையின் முடிவில் புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படும். பின்னர் அந்த புதிய கட்டண விவரங்கள் எப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுமாம். பின்னர் பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் மூலம் இந்த உத்தேசக் கட்டணம் வெளியிடப்படுமாம்.
பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படுமாம்.
அதன் பின்னர் வர்த்தக பிரமுகர்களுடன் கருத்துக்களை கேட்டறிவார்களாம். அதன் பிறகே ஆணையம் தேவைப்பட்டால் சில திருத்தங்களை செய்து புதிய மின் கட்டணத்தை நிர்ணயிக்குமாம்.
ஆலோசனை, உத்தேச கட்டணம், பத்திரிக்கை விளம்பரம், பொது மக்கள் பார்வைக்கு வைப்பது என்பதெல்லாம் வழக்கமான 'பார்மாலிட்டீஸ்'. விதிகளின்படி இதைச் செய்தாக வேண்டும். இந்த 'பார்மாலிட்டீஸ்' எல்லாம் முடிய 3 மாதம் ஆகும். இதன் பின்னர் கட்டண உயர்வு அமலுக்கு வரும்
No comments:
Post a Comment